Published : 14 Dec 2023 06:20 PM
Last Updated : 14 Dec 2023 06:20 PM

“ஆணாதிக்கம், வன்முறை, அபத்தம்...” - ‘அனிமல்’ படத்தை விமர்சித்த ‘விஜய் 68’ ஒளிப்பதிவாளர்

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் ‘அனிமல் படத்தை காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் நேற்று ‘அனிமல்’ படத்தைப் பார்த்தேன். உண்மையாகவே இந்தப் படம் என்னை கோபத்தில் ஆழ்த்தியது. மார்பில் ஸ்வஸ்திகா குறியீட்டுடன் நாஜியைப் பெருமைப்படுத்துகிறது. ‘ஆல்ஃபா மேல்’ (Alpha Male) என்று ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவது, சட்டத்துக்கு எதிரான வன்முறைகள், திருமணம் என்ற பெயரில் நடக்கும் பாலியல் வன்முறை, தவறான உறவுமுறைகள் எனப் பல விஷமக் கருத்துகள் இப்படத்தில் இருக்கின்றன.

மிருகத்தனத்துடன் நடந்துகொள்ளும் கணவனிடம், பெண் ஒருவர் அமைதியாக எதுவும் பேசாமல் இருப்பதுபோல் காட்சிப்படுத்தியிருப்பது அபத்தம். அதுவும் படத்தின் இறுதிக் காட்சியில் ரன்பீர் கபூரை ஆபாசமான செய்கைகளுடன் காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களின் மனதை புண்படுத்தும் செயல். அதிக வசூலை குவித்து வரும் இப்படம், நாம் வாழும் இந்த நாட்டின் சமூக நிலையைப் பிரதிபலிக்கிறதா?

அது மட்டுமின்றி 'A' தணிக்கை சான்றிதழ் பெற்ற இப்படத்தை நான் ஹைதராபாத்தில் பார்த்தபோது திரையரங்கில் சிறுவயதினர் பலரைப் பார்த்தேன். தணிக்கைக் குழுவும், அவர்களின் பொறுப்பும் எங்கே சென்றுவிட்டது என்று தெரியவில்லை" என்று விமர்சித்துள்ளார்.

‘யூ டர்ன்’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சித்தார்த்தா நுனி தற்போது ‘கேப்டன் மில்லர்’ மற்றும் விஜய் 68 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x