Published : 29 Nov 2023 07:14 AM
Last Updated : 29 Nov 2023 07:14 AM

‘தில்லானா மோகனாம்பாள்’ பட புகழ் நாகஸ்வர கலைஞர் பொன்னுசாமி காலமானார்

‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படப் புகழ் நாகஸ்வரக் கலைஞர் மதுரையைச் சேர்ந்த எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 91.

சிவாஜிகணேசனின் நடிப்பில் 1968-ல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘தில்லானா மோகனாம்பாள்'. இதில் சிவாஜிகணேசனுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் நுட்பங்கள் குறித்து விளக்கியவர்கள், நாகஸ்வர கலைஞர்களான சேதுராமன்-பொன்னுசாமி சகோதரர்கள். படத்துக்காக நாகஸ்வரம் வாசித்தவர்களும் அவர்கள்தான்.

காரைக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இவர்கள் நாகஸ்வரம் வாசித்ததைக் கேட்டு ரசித்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன், ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்துக்குப் பிறகு ‘கோவில் புறா’ என்ற படத்தில் இசைக் கலைஞராக அவர் நடித்துள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உட்பட வெளிநாடுகளிலும் இவர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். பொன்னுசாமி, 9 வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். சேதுராமன் 2000-ம் ஆண்டில் காலமானார். இந்நிலையில், பொன்னுச்சாமி நேற்று முன்தினம் இரவு விளாங்குடியில் உள்ள தனது மகன் வீட்டில் காலமானார். அவர் உடல் தத்தனேரி மின் மயானத்தில் நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த பொன்னுசாமிக்கு மனைவி ருக்மணி, மகன்கள் நடராஜ சுந்தரம், மாரியப்பன், உமாமகேஸ்வரன், மகள்கள் பொன்னரசி, சம்பூர்ணம் உள்ளனர். பொன்னுச்சாமியின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, கிருஷ்ண கான சபாவின் சங்கீத சூடாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற இவர், 87 வயது வரை நாகஸ்வரம் வாசித்து வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x