Published : 25 Nov 2023 05:49 AM
Last Updated : 25 Nov 2023 05:49 AM

சத்யவான் சாவித்திரியின் நவீன வடிவம்! - ’டாக்டர் சாவித்திரி’

இதிகாசக் கதையான சத்யவான் சாவித்திரியின் நவீன வடிவம்தான் ‘டாக்டர் சாவித்திரி’.மருத்துவர் சாவித்திரி (அஞ்சலி தேவி) ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பவர். அவர் கணவர் சோமசுந்தரம் (பி.ஆர்.பந்துலு) வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். கிரிமினல் வழக்கறிஞரான நாகலிங்கம் (டி.பாலசுப்பிரமணியம்), தனது நண்பர் மகள் வனஜாவை (எம்.என்.ராஜம்), மனைவியாக்கி சொத்துகளை அடைய நினைக்கிறார். டாக்டரான ஜெகத் சிங் (எஸ்.பாலசந்தர்) மனநல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

ஒரு கட்டத்தில் நாகலிங்கம் கொல்லப்பட, கொலைப்பழி மருத்துவர் சாவித்திரியின் கணவர் மீது விழுகிறது. அவருக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கிறது. நவீன கால சாவித்திரி, துப்பறிபவராக மாறி, உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தனது கணவரை எப்படி மீட்கிறார் என்பது என்பது படம்.

இதன் கதை, திரைக்கதையை ஆச்சாரியா எழுதினார். புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், அமெச்சூர் நாடகநடிகரும் கூட. ‘மங்கம்மா சபதம்’ (1943), ‘அபூர்வ சகோதரர்கள் (1949) படங்களை இயக்கியவர். அவர் முழுப் பெயர், தூத்துக்குடி கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி. இவரைடிஜிஆர் என்றும் அழைப்பது உண்டு. ஜெமினியின் பிரம்மாண்ட படமான ‘சந்திரலேகா’வை (1948) முதலில் இயக்கியவர் இவர்தான். அந்தப் படத்தின் புகழ்பெற்ற டிரம்ஸ் டான்ஸ் உட்பட பல காட்சிகளை இயக்கிய இவர், எஸ்.எஸ்.வாசனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகினார்.

‘டாக்டர் சாவித்திரி’ படத்தின் வசனத்தை ஆச்சார்யாவுடன் இளங்கோவன், வேலன் இணைந்து எழுதினர். ஜி.ராமநாதன் இசையில் உடுமலை நாராயணகவியும், மருதகாசியும் பாடல்களை எழுதினார்கள். இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை ஆர்.எம்.கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருந்தார். அருணா பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இந்தப் படத்துக்காக என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய ‘காசிக்கு போனா கரு உண்டாகும் என்ற’பகுத்தறிவு பாடல் அப்போது அதிரிபுதிரி ஹிட். அவர் குரலில் வந்த மற்றொரு பாடலான, ‘வாதம் வம்பு பண்ணக் கூடாது’ வாழ்க்கையின் யதார்த்தத்தை பேசியது. லீலா பாடிய, ‘மூலை வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிற முனியப்பா’, ‘தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்’, டி.எம்.எஸ்.பாடிய ‘தென்பழனி மலைமேல்’ ஆகிய பாடல்கள் இப்போதும் ரசனையான உணர்வை தருகின்றன.வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்தப் படம், 1950களில் அருணா பிலிம்ஸ் முன்னணி நிறுவனமாக உயர வழிவகுத்தது.

1955ம் ஆண்டு இதே தேதியில்தான் ‘டாக்டர் சாவித்திரி’ வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x