Published : 22 Nov 2023 06:15 AM
Last Updated : 22 Nov 2023 06:15 AM

மணிமாலை: 1940-களிலேயே உருவான ஆந்தாலஜி திரைப்படம்!

1930-களின் இறுதி மற்றும் 1940-களில் ஆரம்பத்தில் நகைச்சுவை ஆந்தாலஜி படங்களைத் தயாரிக்கும் டிரெண்ட் இங்கு இருந்தது. சின்ன சின்ன குறும்படங்களை உருவாக்கி அதை ஒரே தலைப்பின் கீழ் வெளியிட்டு வந்தனர். அப்படி 1939-ம் ஆண்டு ‘சிரிக்காதே’ என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது.ஸ்ரீரஞ்சனி பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக எஸ்.எஸ்.வாசன் தயாரித்த திரைப்படம் இது. இதில், ‘யம வாதனை’, ‘அடங்காப் பிடாரி’, ‘புலி வேட்டை’,‘மாலைக் கண்ணன்’, ‘போலிச் சாமியார்’ என 5 குறும்படங்களின் தொகுப்பாக வெளியான இதுதான், இந்தியாவின் முதல் ஆந்தாலஜி திரைப்படமாக அடையாளம் காணப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிகர்கள் நடித்திருந்த இதை ஆர்.பிரகாஷ், ஜிடேன் பேனர்ஜி இயக்கியிருந்தனர்.

இதையடுத்து ‘மணிமாலை’ என்ற பெயரில் திரைப்படம் உருவானது.ஓரியண்டல் பிலிம்ஸ் தயாரித்த இதில், ஆஷாடபூதி, மைனரின் காதல், அப்பூதி அடிகள், நவீன மார்க்கண்டேயர் ஆகிய நான்குகாமெடி குறும்படங்கள் இடம்பெற்றன. ஆஷாடபூதி, தீண்டாமைக்கு எதிரான படம். இதில், பாகவதராக ரங்காச்சாரி, அவர்மனைவியாக ஆதிலட்சுமி, சீடராக நகைச்சுவை நடிகர் டி.வி.சேதுராமன், கிராமத் தலைவராக எம்.ஆர்.சுப்பிரமணியம் நடித்திருந்தனர்.

‘மைனரின் காதல்’ படத்தில் டி.எஸ்.துரைராஜ் மைனராக நடித்தார். இவர் கிண்டி ரேஸுக்கான குதிரைகளை வளர்த்தவர். சில படங்களைத் தயாரித்திருக்கிறார். தனது தாய் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்ய மறுக்கும் அவருக்குத் திருமணமான சலவைக்காரப் பெண் மீது காதல் வருகிறது. அந்தக் காதல், என்ன மாதிரியான சிக்கல்களைக் கொண்டு வருகிறது என்பது படம். ‘அப்பூதி அடிகள்’ நகைச்சுவையுடன் கூடிய தெய்வப் பக்தியை பேசிய புராணக் கதையைச் சொன்ன படம். பி.பி.ரங்காச்சாரி, அடிகளாக நடித்தார். இந்தப் படத்தில், வி.என்.ஜானகி, கிருஷ்ணா பாயுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்.

நவீன மார்க்கண்டேயர், இளமை வரம் பெற்ற மார்க்கண்டேயனை கிண்டலடித்து உருவான படம். டி.ஆர் ராமச்சந்திரன் தான் மார்க்கண்டேயர். காளி என்.ரத்னம், எமனாகவும் கன்னட நடிகர் கே. ஹிரணய்யா சித்ரகுப்தனாகவும் நடித்தனர்.

ஃபிரேம் சேத்னா, ஏ.டி.கிருஷ்ணசாமி (ஏடிகே)இயக்கியிருந்தனர். கிண்டியிலிருந்த வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 1941-ம் ஆண்டு இதே தேதியில் இந்தப் படம் வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x