Published : 19 Nov 2023 05:40 AM
Last Updated : 19 Nov 2023 05:40 AM
சென்னை: சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், ‘80-ஸ் பில்டப்’. கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், ஆர்.சுந்தர்ராஜன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘குலேபகாவலி', 'ஜாக்பாட்' படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது.
காமெடி படமான இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சந்தானம் பேசியதாவது: இயக்குநர் கல்யாண், இந்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்டுக் கொண்டே இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் உடனடியாகக் கொடுக்க முடியவில்லை. எனக்கு 15 நாள் பிரேக் கிடைத்தது. அப்போது, ‘வாங்க சார், டாக்கி போர்ஷனை முடித்துவிட்டலாம்’ என்றார். 20 நாளில் படம் பண்ணிவிடலாம் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தளவுக்கு வேகம். படப்பிடிப்பில், சுற்றி கேமரா இருக்கும். அனகோண்டா முட்டையில் கூட ஆம்லேட் போட்டுவிடலாம். ஆனால் கல்யாண் அவித்த முட்டையில் ஆம்லேட் போடுவார். எப்போதும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஸ்பாட் எப்போதும் பெரும் கூட்டமாகவே இருக்கும்.
சந்தானம் படம் என்றாலே ஹீரோயின் கிடைப்பது கஷ்டம் என்ற பேச்சு இருக்கும். இதில் ஹீரோயின் ராதிகா பிரீத்தி, தமிழ்ப் பேசத் தெரிந்ததால் சிறப்பாக நடித்திருக்கிறார். இது காமெடி படம் மட்டுமல்ல, காதலும் இருக்கிறது.
எண்பதுகளில் சினிமாவை எப்படி எடுத்திருப்பார்களோ, அதே போலதான் இதை எடுத்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்துக்கே சென்று பார்ப்பது போல இந்தப் படத்தை பார்க்க வேண்டும். காமெடி, கதை, திரைக்கதை எல்லாமே எண்பதுகளில் நடப்பது போல இருக்கும். லாஜிக்கை தூக்கி ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால் நன்றாகச் சிரித்து விட்டு வரலாம். இவ்வாறு சந்தானம் பேசினார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்தராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT