Published : 16 Nov 2023 09:15 PM
Last Updated : 16 Nov 2023 09:15 PM
திருப்பூர்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம், “நானும் மனிதன்தான்; தவறு இருக்கவே செய்யும்” என்றார்.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஸ்ரீசக்தி திரையரங்கம் உள்ளது. இது தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமானது. இந்த திரையரங்கில் கடந்த 12-ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது, அனுமதி இன்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜுவுக்கு புகார் சென்றது. இதையடுத்து திரையரங்குக்கு விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், திருப்பூர் பெருந்தொழுவில் உள்ள வீட்டில் செய்தியாளர்களிடம் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று கூறியது: “தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன். தமிழ்நாடு அரசின் சிறப்பு காட்சிகள் தொடர்பான விதிமுறைகள் இந்தி படத்துக்கு பொருந்தாது என நினைத்து, தீபாவளி அன்று காலை சிறப்பு காட்சியை எங்கள் திரையரங்கத்தினர் திரையிட்டுவிட்டனர். நானும் மனிதன் தான் 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது. 10 சதவீதம் தவறு இருக்கத்தான் செய்யும். நல்ல பெயருடன் வெளியே செல்ல முடிவெடுத்து, இந்த முடிவை அறிவித்து வெளியேறுகிறேன். சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்தியிருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். இதனால், இந்தப் பதவிகளில் இருந்து வெளியேறுகிறேன்.
‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்துக்கு சிறப்புக் காட்சிகள் தொடர்பாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்தி படத்துக்கு குறிப்பிடவில்லை. அதனால்தான் திரையிட்டு விட்டனர். இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். எனவே, இந்த பொறுப்புகளில் இருந்து வெளியேறுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT