இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசனின் ‘அரிசி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசனின் ‘அரிசி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

Published on

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் ‘அரிசி’ படத்தின் முதல் பார்வையை பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இளையராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தை மோனிகா புரொடக்‌ஷன் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கிறார். எஸ்.ஏ.விஜய்குமார் இயகுக்கிறார். இரா.முத்தரசன் மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். விவசாயத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படம் உணவின் முக்கியத்தை வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் விஜய்குமார் கூறுகையில், “முத்தரசனிடம் இதில் நடிக்கக் கேட்டபோது முதலில் அவர் மறுத்துவிட்டார். தனக்கு அரசியல் பணிகள் அதிகம் இருக்கின்றன என்று கூறிவிட்டார். இருந்தாலும் இந்தக் கதையில் நடித்து இதன் கருத்தை நீங்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று சொன்னோம். பிறகு கதையைக் கேட்டார். விவசாயப் பின்னணி கதை. முதலில் தயக்கத்துடன் படப்பிடிப்புக்கு வந்தார். பிறகு சகஜமாகிவிட்டார்” என்றார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரை பொறுத்தவரை கருமேகம் மற்றும் வயல் வெளியில் சட்டையில்லாமல் பனியனும் தோளில் துண்டும் போட்டுக்கொண்டு முத்தரசன் நின்றுகொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in