Published : 05 Nov 2023 06:03 AM
Last Updated : 05 Nov 2023 06:03 AM
இயக்குநர், நடிகர், கதை, வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்ட ஏ.பி.நாகராஜன், நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். தனது, பழனி கதிரவன் நாடகசபா மூலம் இவர் நடத்திய நாடகம்,‘நால்வர்’. இதற்கு அதிக வரவேற்புக் கிடைத்ததும் அதைத் திரைப்படமாக்க முன் வந்தார், தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு. அந்தக் கதையில் சினிமாவுக்காக சிறுசிறு மாற்றங்கள் செய்து, கதை, திரைக்கதை, வசனம்எழுதிய நாகராஜன், அதில், கதாநாயகனாகவும் அறிமுகமானார். படத்தை வி.கிருஷ்ணன் இயக்கினார்.
கதைப்படி, மில்லில் பணியாற்றும் தந்தைக்கு நான்கு மகன்கள். மூத்த மகன் நேர்மையான காவல்துறை அதிகாரி (நாகராஜன்), அடுத்த மகன்வழக்கறிஞர், மூன்றாவது மகன், தனது தந்தை பணிபுரியும் மில்லில்மேற்பார்வையாளர் (எம்.என்.கிருஷ்ணன்). கடைசி மகன் சுயமரியாதையும், பகுத்தறிவு வாதமும் பேசுபவன். ஒரு கட்டத்தில் தந்தை மீது புகார் வருகிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியான மகன் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக மாறிய குமாரி தங்கம் இதில் கதாநாயகியாக நடித்தார். எம்.என்.கண்ணாம்பா, டி.பி.முத்துலட்சுமி, எம்.என்.கிருஷ்ணன், சி.ஆர்.விஜயகுமாரி, வி.எம் ஏழுமலை உட்பட பலர் நடித்தனர். கே.வி. மகாதேவன் இசையில் மருதகாசி, தஞ்சை ராமையா தாஸ், கா.மு.ஷெரீஃப் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்தப் படம் வெற்றிப் பெற்றதை அடுத்து, கதாநாயகனாகச் சிறப்பானநடிப்பை வெளிப்படுத்திய தற்காகவும் அருமையான வசனத்துக்காகவும் பாராட்டப்பட்டார், ஏ.பி.நாகராஜன். இதற்குப் பிறகு ‘நால்வர் நாகராஜன்’என்றே அழைக்கத் தொடங்கினர்.
இதற்கு முன் டிகேஎஸ் சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தில் ஏ.பி.நாகராஜன் கதாநாயகியாகநடித்தார் என்பது பலருக்குத் தெரியாது. ‘நால்வர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சி.ஆர்.விஜயகுமாரி, பிறகு ஹீரோயின் ஆனார்.
இதில் நடிகராகவும் கதை, வசனகர்த்தாவாகவும் அறிமுகமான ஏ.பி.நாகராஜன், பின்பு பிரபல இயக்குநராகி, தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘நால்வர்’ படம் 1953-ம்ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT