Published : 23 Oct 2023 08:46 AM
Last Updated : 23 Oct 2023 08:46 AM

“பாஜகவில் இருந்து விலகுகிறேன்” - 25 ஆண்டு பயணம் முடிவுக்கு வருவதாக நடிகை கவுதமி அறிவிப்பு

சென்னை: கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதமி வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். தேசத்தின் வளர்ச்சியில் என்னுடைய பங்கை அளிக்க 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் அக்கட்சியில் இணைந்தேன். என்னுடைய வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்தாலும், அந்த பணிக்கு நான் கவுரவம் செய்து வந்தேன். இன்று வரை என்னுடைய வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத இன்னல்கள் உள்ளன. கட்சியிடமிருந்தோ அதன் தலைவர்களிடமிருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில், என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறித்து எனக்கு தெரியவந்துள்ளது.

என்னுடைய 17 வயதிலிருந்து நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சினிமா, தொலைகாட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் 37 ஆண்டுகாலம் இருந்துள்ளேன். என்னுடைய இந்த வயதில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், என்னுடைய மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவும் நான் என்னுடைய வாழ்க்கை முழுக்க உழைத்துள்ளேன். நானும் என் மகளும் பாதுகாப்பாக செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார்.

என்னுடைய பலவீனம் மற்றும் தனிமையை பயன்படுத்தி அழகப்பன் என்னை 20 ஆண்டுகளுக்கு முன்பு அணுகினார். அப்போது நான் என்னுடைய இரு பெற்றோரையும் இழந்த ஆதரவற்றவளாக மட்டுமின்றி, ஒரு கைக்குழந்தையை வைத்திருந்த தாயாகவும் இருந்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு அக்கறையான மூத்த நபர் போல அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் நுழைத்துக் கொண்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சூழலில் நான் என்னுடைய சில நிலங்களை விற்பதற்கான ஆவணங்கள் தொடர்பாக அவரை நம்பினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றியது குறித்து சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன்.

நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம், சொத்து, ஆவணங்களை மீட்கும்விதமாக. எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் நம் நாட்டின் சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றினேன். என்னுடைய முதலமைச்சர், என்னுடைய காவல்துறை, என்னுடைய நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து பல புகார்களையும் அளித்தேன். ஆனால் அந்த நடைமுறை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதை அறிந்தேன்.

2021 தமிழக சட்டசபை தேர்தலின்போது, பாஜக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்களிக்கப்பட்டது. ராஜபாளையம் மக்களுக்காகவும், பாஜகவை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்தவும் வேண்டியும் நான் என்னை அர்ப்பணித்து பணியாற்றினேன். எனினும், அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் ரத்தானது. ஆனாலும், நான் கட்சிக்கான என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்தேன். எனினும் 25 ஆண்டுகாலம் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை என்பதையும், அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன். ஆனால் இப்போதும் என்னுடைய முதலமைச்சர், என் காவல்துறை, என் நீதித்துறை ஆகியோர் எனக்கான நீதியை எனக்கு பெற்று தருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மிகப்பெரிய வலி மற்றும் வேதனையுடனும், அதே நேரம் கடும் உறுதியுடனும் இந்த ராஜினாமா கடிதத்தை எழுதுகிறேன்”. இவ்வாறு கவுதமி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x