Published : 15 Oct 2023 12:01 PM
Last Updated : 15 Oct 2023 12:01 PM

எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’

இயக்குநர் பாரதிராஜாவின் பள்ளி பல ‘டிரெண்ட்ஷெட்டர்’ இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறது. அதில் ஒருவர் மணிவண்ணன். ‘நிழல்கள்’மூலம் கதை, வசனகர்த்தாவாக மாறிய அவர், இயக்குநராக அறிமுகமான படம், ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. இந்தப் படம் இயக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜா.

தனது மகள் அருக்காணி (சுஹாசினி)மாப்பிள்ளைக் கிடைக்காமல் தவிக்கும் கிராமத்துஅப்பா, நகரத்தில் வசிக்கும் தனது பிராயத்து நண்பனை எதிர்பார்க்காமல் சந்திக்கிறார். ‘உன் மகளை,என் மகன் முரளி (மோகன்) திருமணம்செய்து கொள்வான்’என்கிறார் நண்பர். முதலில் மறுக்கும் முரளி, பெற்றோருக்காக அழகில்லாத அருக்கணியைத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்துக்குப் பிறகு அலுவலக நிகழ்வு ஒன்றில் ராதாவை சந்திக்கக் கண்டதும் காதல் வருகிறது. அவளுக்காவே பெங்களூரு கிளைக்கு மாறிச் செல்லும் முரளி, ராதாவை காதலித்து, திருமணம் செய்துகொள்கிறார்.

ஒருகட்டத்தில் அவர்கள் வீட்டிலேயே வேலைக்காரியாக வந்து சேர்கிறார், அருக்காணி. ராதாவுக்கு, அருக்காணி அவர் மனைவி என்பது தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது படம். அழகு என்பது உருவத்தில் இல்லை என்ற சீரியஸ் கதையை கலகலப்பாகச் சொன்ன படம்.

எவரெஸ்ட் பிலிம்ஸ் சார்பில் கலைமணி படத்தைத் தயாரித்து, கதையையும் எழுதியிருந்தார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மணிவண்ணன். இவர் இயக்கிய முதல் படம் ‘ஜோதி’. அது வெளியாவது தாமதமானதால், ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ முதலில் வெளியாகி அவருடைய முதல் படமாகிவிட்டது. இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்டத் தலைப்பு, ‘அருக்காணி’.

கிராமத்துப் பெண்ணாக சுஹாசினி அப்பாவியாக நடித்திருப்பார். வித்தியாசமான தலைமுடியுடனும் உதட்டுக்கு மேல் நாக்கை தொங்கப்போட்டபடி அடிக்கடி பேசும் அவர் வழக்கமும் கணவன் இன்னொருபெண்ணுடன் இருக்க, அங்கு வேலைக்காரியாகதான் வாழும் வாழ்க்கையை நினைத்து அவர் கலங்கும் இடத்திலும் நடிப்பில் மிரட்டியிருப்பார். ராதா, மாடர்ன் பெண். சகோதரர் எஸ்.வி.சேகர்.மோகனின் தந்தை வினு சக்கரவர்த்தி, அம்மா கமலா காமேஷ் என குறைவான கேரக்டர்களை வைத்தே நிறைவான படத்தைக் கொடுத்தார் மணிவண்ணன்.

இளையராஜா இசையில் பாடல்களும்பின்னணி இசையும் படத்தை மேலும் ரசிக்க வைத்தன. ‘பூவாடைக் காற்று’என்ற பாடல் அழகிய மெலடி. ‘எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’பாடல் அதிக வரவேற்பைப் பெற்றது.

தமிழில் வெற்றிபெற்ற இந்தப்படம் தெலுங்கில் ‘முக்கு புடகா’ என்றபெயரில் ரீமேக் ஆனது. சுஹாசினி அங்கும் அதே கேரக்டரில் நடித்தார். கன்னடத்தில் பிரம்ம கண்டு (Brahma Gantu) என்ற பெயரிலும் இந்தியில் ‘நஸீப் அப்னா அப்னா’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. 1982-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தப்படம். கோபுரங்கள் சாய்வதில்லை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x