Published : 12 Oct 2023 01:39 PM
Last Updated : 12 Oct 2023 01:39 PM
மும்பை: தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த காரணத்தால்தான் கனடா குடிமகன் ஆனதாக நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த அக்ஷய் குமார் தான் கனடா குடிமகன் ஆனது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: என்னுடைய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் நான் கனடியனாக மாறினேன். ஒரு கட்டத்தில் தொடர்ந்து 13 அல்லது 14 படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த தருணத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் கனடாவில் இருந்தார். என்னை வந்துவிடுமாறு கூறிய அவர், அங்கு இருவரும் சேர்ந்து கார்கோ தொழில் செய்யலாம் என்று யோசனை தெரிவித்தார். என் படமும் சரியாக போகாததால் நான் அதற்கு சம்மதித்தேன். நான் டோரென்டோவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது எனக்கு கனடா பாஸ்போர்ட் கிடைத்தது. அதற்கு இடையில் என்னுடைய இரண்டு படங்கள் ரிலிஸ் ஆகி, சூப்பர்ஹிட் ஆகிவிட்டன.
நான் உடனே என் நண்பனிடம் நான் இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதாக கூறினேன். அதன் பிறகே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் மக்கள் அதனை மனதில் வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது வெறும் பயண ஆவணம் மட்டுமே. நான் என்னுடைய வரிகளை சரியாக செலுத்துகிறேன். நாட்டிலேயே அதிக வரி செலுத்துபவர்களில் நானும் ஒருவன்.
9, 10 ஆண்டுகளாக நான் கனடாவுக்கு திரும்பிச் செல்லவில்லை. அது ஒரு நல்ல இடம். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கூட அங்கு இருக்கின்றனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி எனக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைத்தது தற்செயலானது. ஆனால் பாஸ்போர்ட் முக்கியம் அல்ல. நம்முடைய மனமும், இதயமும் தான் இந்தியனாக இருப்பதுதான் முக்கியம். மனமும், இதயமும் இந்தியனாக இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் மட்டும் இருப்பதில் என்ன அர்த்தம்?” இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை கேட்டு அக்ஷய் குமார் விண்ணப்பித்திருந்தார். ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று இந்திய குடியுரிமை பெற்றுள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை அவர் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT