Published : 10 Oct 2023 03:18 PM
Last Updated : 10 Oct 2023 03:18 PM

சதிகளை அம்பலப்படுத்தும் ’தி வேக்சின் வார்’ - உ.பி. முதல்வர் யோகி புகழாரம்

லக்னோ: விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ‘தி வேக்சின் வார்’ திரைப்படத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைத் தொடர்ந்து விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள படம் ‘தி வேக்சின் வார்’ (The Vaccine War). கடந்த 28ஆம் தேதி வெளியான இப்படத்தில் அனுபம் கெர், நானா படேகர், சப்தமி கவுடா மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உன்னாவ் மாவட்டத்தில் நேற்று (அக்.9) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரூ.804 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய யோகி ஆதித்யநாத், சுதந்திரப் போராட்ட வீரர் ராஜா ராவ் ராமபக்‌ஷ் சிங் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் தனது உரையில் ‘தி வேக்சின் வார்’ திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டார். இது குறித்து அவர் பேசியது: “’தி வேக்சின் வார்’ என்று ஒரு புதிய படம் வெளியாகியுள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியா நிகழ்த்திய அபாரமான அறிவியல் சாதனைகளை இப்படம் பறைசாற்றுகிறது.

மேலும், இந்தப் படம் இந்தியாவுக்கு எதிரான சதிகளை அம்பலப்படுத்தி, இந்திய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான ஆராய்ச்சியை முன்னிலைப்படுத்துகிறது. சிலரது நோக்கங்களையும், நடவடிக்கைகளையும் உலக அரங்கில் அம்பலப்படுத்துவது அவசியம். இந்த விஷயத்தில் ’தி வேக்சின் வார்’ திரைப்படம் மிகச் சிறந்த முன்னெடுப்பு.

கரோனா போராட்டம் ஒரு தனிநபரின் போராட்டம் அல்ல. பிரதமர் அதனை ஒரு கேப்டனைப் போல வழிநடத்திய நிலையில், சில நபர்கள் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் இந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயன்றனர். நாட்டுக்கு எதிரான இது போன்ற சதிகளை ‘தி வேக்சின் வார்’ திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், தேசத்துக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலான இடைவிடாத முயற்சிகளின் பின்னணியில் உள்ள முகங்களை அம்பலப்படுத்துகிறது.” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ‘தி வேக்சின் வார்’ திரைப்படத்தை பாராட்டிப் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x