Published : 09 Oct 2023 05:22 AM
Last Updated : 09 Oct 2023 05:22 AM
மேகலா பிக்சர்ஸ் சார்பில் முரசொலி மாறன் கதை, வசனம் எழுதி தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்’. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்தப் படத்தின் டைட்டிலில் ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ’ என்றும் கலைஞரின் ‘எங்கள் தங்கம்’ என்றும் போட்டிருப்பார்கள்.
சோ, அசோகன், தேங்காய் சீனிவாசன், ஏவிஎம்.ராஜன், புஷ்பலதா, மனோரமா ஆகியோர்நடித்து வெளியான இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடியாக நடிக்க, அண்ணாதுரை, கருணாநிதி ஒரு காட்சியில் தோன்றியிருப்பார்கள். ஆக, நான்கு முன்னாள் முதல்வர்கள் இந்தப் படத்தில் தோன்றியுள்ளனர்.
எம்.ஜி.ஆரின் பார்வையற்ற தங்கை புஷ்பலதா. குடிகாரனாகவும் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கும் எம்.ஜி.ஆரின் நண்பன் ஏவிஎம்.ராஜன், புஷ்பலதாவைப் பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்துகொள்கிறார்.
அவர் மீதான திருட்டுப் பழியை, தானே ஏற்றுக்கொள்வார் எம்.ஜி.ஆர். ஒரு பக்கம் போலீஸும், இன்னொரு பக்கம் வில்லன் கூட்டமும் எம்.ஜி.ஆரைத் தேடும். கடைசியில், அசோகன், மனோகர் உள்ளிட்ட வில்லன் கூட்டத்தை போலீஸில் பிடித்துக் கொடுப்பார் எம்.ஜி.ஆர். பிறகு காதலி ஜெயலலிதாவுடன் சேர்வதோடு படம் முடியும்.
முதல் காட்சியிலேயே எம்.ஜி.ஆர், நடிகர் எம்.ஜி.ஆராக, சிறுசேமிப்புத் துறை துணைத்தலைவராக வந்து பேசுவார். அப்போது லாரி டிரைவரான சோ, “ஐயோ தலைவரே, உங்களை தொட்டு பாக்கலாமா?’ என்று அவர் முகம் மற்றும் கழுத்தை ஒரு ரசிகனாகத் தொடுவார். நெளிவார் எம்.ஜி.ஆர். இந்தக் காட்சி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
படத்தின் கதாநாயகனான லாரி டிரைவர் எம்.ஜி.ஆர்,அவரிடம் சிறுசேமிப்புக்குப் பணம் கொடுப்பது போல காட்சி ஆரம்பிக்கும். இந்தக் காட்சியில் மேடையில் முரசொலி மாறனும் இருப்பார்.
ஒரு காட்சியில், லாட்டரியில் எம்.ஜி.ஆருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுவிழும். அதை அண்ணாதுரை வழங்குவது போன்ற காட்சி.அதில் அண்ணாதுரையுடன் நெடுஞ்செழியனும் கருணாநிதியும் வருவார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். ‘தங்கப் பதக்கத்தின் மேலே’,‘ஒருநாள் கூத்துக்கு...’, ‘டோன்ட் டச் மீமிஸ்டர் எக்ஸ்’, ‘நான் அளவோடு ரசிப்பவன்’, ‘மோகம் பிறந்ததம்மா’, ‘நான் செத்துப்பிழைச்சவன்டா’ உட்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்.
இதில் வித்தியாசமான கெட்டப்பில் எம்.ஜி.ஆர் தோன்றும் ‘கதாகாலட்சேபம்’ பாடல் அப்போது அதிகம் ரசிக்கப்பட்டது.
‘நான் அளவோடு ரசிப்பவன்’ பாடலை எழுதும்போது, அடுத்த வரி வரவில்லை கவிஞர் வாலிக்கு. அப்போது அங்கு வந்த கருணாநிதியிடம், முதல் வரியை படித்துக் காட்டினார், வாலி. அடுத்தவரியாக, ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்றார்கருணாநிதி. பிரமாதம் என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலை உடனடியாக எழுதி முடித்திருக்கிறார் வாலி. பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், அந்த வரிக்காக வாலிக்கு முத்தம் கொடுக்க, ‘அதைச் சொன்னது கருணாநிதிதான், இந்த முத்தத்தை நீங்கள் அவருக்குத்தான் கொடுக்கணும்’ என்றார் வாலி.
எம்.ஜி.ஆர் சம்பளமே வாங்காமல்நடித்த படம் இது. சிறந்த படத்துக்கான தமிழக அரசின் இரண்டாவது பரிசைப்பெற்றது படம். இந்தப் படத்துக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார் வாலி.
பல திரையரங்குகளில் நூறு நாள்ஓடியது. நூறாவது நாள் விழாவில் பேசிய கருணாநிதி, “கர்ணன், கேட்டால்தான் கொடுப்பார். எம்.ஜி.ஆர் திராவிட கர்ணன். கேட்காமலேயேகொடுப்பார். கொடுத்து கொடுத்து சிவந்த கை அவருடையது. அதனால்தான் அவர் வீடு அமைந்திருக்கும் மாவட்டத்துக்கே ‘செங்கை’ என்றுபெயர் வந்துள்ளது’’ என்றார். (எம்.ஜி.ஆர்.வீடு இருந்த ராமாவரம் தோட்டம் அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது). அதே விழாவில் பேசிய முரசொலி மாறன், “எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் சம்பளம்வாங்காமல் நடித்துக் கொடுத்து, படம் வெற்றிபெற்றதால்தான் கடனில் இருந்து எங்கள் குடும்பம் மீண்டது” என்று தெரிவித்தார்.
1970-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது ‘எங்கள் தங்கம்’ . 53 வருடங்கள் ஆனாலும் ‘தங்கப் பதக்கத்தின் மேலே’-வும் ‘நான் அளவோடு ரசிப்பவன்’ பாடலும் மறந்துவிடுமா என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment