Published : 07 Oct 2023 05:36 AM
Last Updated : 07 Oct 2023 05:36 AM
மித்ரா மனோகர் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), திருமண இணையர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் உளவியல் ஆலோசகர். மித்ராவுக்கும் கணவர் மனோகருக்கும் (விக்ரம் பிரபு) இடையிலான திருமண வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் உளவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இயல்பாக எழக்கூடிய பிரச்சினைகளைத் தடுத்துவிடுகிறார். அதுவே ஒரு கட்டத்தில் பிரச்சினையாக உருவெடுக்கிறது. மித்ராவிடம் இரு வெவ்வேறு இணையர்கள் ஆலோசனைக்கு வருகிறார்கள். ஐடி துறையில் பணியாற்றும் ரங்கேஷ் (விதார்த்) மனைவி பவித்ராவிடம் (அபர்ணதி) விவாகரத்து கேட்கிறார். குழந்தை பிறப்புக்குப் பிறகு பவித்ரா பருமனாகிவிட்டதைக் காரணமாகச் சொல்கிறார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளைஞர்கள் அர்ஜுன் (ஸ்ரீ), திவ்யா (சானியா அய்யப்பன்) இருவருக்கும் தினமும் சண்டை வருகிறது. இருவருக்கும் மண வாழ்க்கையில் தொடர்வது போராட்டமாக இருக்கிறது. இந்த மூன்று இணையர்களும் அவர்களின் மணவாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து எப்படி மீள்கிறார்கள், மனநல ஆலோசகராக மித்ராவின் பங்கு என்ன என்பது மீதிக் கதை.
வெவ்வேறு குடும்பப் பிண்ணனி, வளர்ப்பு முறை, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றைச் சேர்ந்த மூன்று இணையர்களை முன்வைத்து திருமண வாழ்க்கையில் இணையர்களுக்குள் நேரக்கூடிய சில பிரச்சினைகளைக் கையிலெடுத்து அவற்றுக்கானத் தீர்வை அளிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். உறவுகள், உணர்வுகள், உளவியல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் ஃபீல் குட் தன்மையை இறுதிவரை தக்க வைத்திருப்பது மனதுக்கு இதமான அனுபவத்தைத் தருகிறது. அதேபோல் உறவுகளுக்கு இடையிலான சிக்கல்களை வைத்து சோகமான காட்சிகளையும், உணர்ச்சிகரத் தருணங்களையும் திணிக்காமல் படம் முழுவதும் மெல்லிய நகைச்சுவையையும் புன்னகை பூக்க வைக்கும் தருணங்களையும் சேர்த்திருப்பது நல்ல விஷயம்.
திருமண இணையர்களுக்கு இடையில் அன்பும் அக்கறையும் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது குறைந்துபோவதும் இணையர்கள் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசாததுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் என்பது அழுத்தமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இணையரை மட்டம் தட்டுவது, அது ஒருவரை எந்த அளவு பாதிக்கும் என்பதையே புரிந்துகொள்ளாமல் இருப்பது, பெற்றோர், உறவினர்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் ஏமாற்றங்களை இணையர் மீதான வெறுப்பாகப் பிரதிபலிப்பது, தன்னுடைய புத்தக அறிவை யதார்த்த வாழ்க்கைக்கு அப்படியே பொருத்தி இணையரின் இயல்பான எதிர்பார்ப்புகளுக்கு முகம்கொடுக்க மறுப்பது என இணையர்களின் பிரிவுக்கு வித்திடக்கூடிய பிரச்சினைகளின் நுட்பமான பரிமாணங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது திரைக்கதை. அர்த்தம் நிறைந்த, ஆழமான வசனங்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
அதே நேரம் படத்தில் சில பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கின்றன. பெண்கள்பருமனாக இருப்பது பெரிய பிரச்சினைபோல் காண்பித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம், அதேபோல் இணையரின் மொபைலை எடுத்துப் பரிசோதிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் செயல்பாடுகளை அன்பின் வெளிப்பாடாகச் சித்திரிக்கும் வசனங்களும் பிரச்சினைக்குரியவை. படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம்.
ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த் மூவரும் பாராட்டத்தக்க நடிப்பைத் தந்திருக்கிறார்கள். விக்ரம் பிரபு, ,ஸ்ரீ, சானியா மூவரும் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சரியாகத் தந்திருக்கிறார்கள். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மறைந்த நடிகர் மனோபாலா கவனம் ஈர்க்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை உணர்வுபூர்வ காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற ஒளி மற்றும் நிறத் தேர்வுகளுடன் பயணிக்கிறது.
திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும்திருமண உறவில் எழக்கூடியபிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப்பரிசீலிக்க வைத்திருக்கும் இந்தப் படக்குழுவினரின் கைகளை இறுகப்பற்றி வரவேற்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment