Published : 12 Dec 2017 11:14 AM
Last Updated : 12 Dec 2017 11:14 AM

சம்மர் 1993: குழந்தைகளின் உலகம்

பெற்றோரை இழந்த சிறுமியின் கோடைக்கால அனுபவங்களை குழந்தைகளுக்கே உரித்தான குழந்தைத்தன்மைகளோடு மிக அழகியலாக சொல்கிறது சம்மர் 1993. இயக்குநர் கார்லா சைமன் தனது சிறு வயது நினைவுகளை வைத்தே இப்படத்தை எடுத்திருக்கிறார்.

எய்ட்ஸ் பாதிப்பால் தனது பெற்றோரை இழக்கும் ஃபிரிடா அதன்பின் கிராமத்தில் இருக்கும் அவளது மாமா, அத்தையிடம் அனுப்பி வைக்கப்படுகிறாள். ஒரு கோடைக்காலப் பொழுதில் அங்கே செல்லும் பீரிடா என்னவெல்லாம் செய்கிறாள்? அதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே சம்மர் 1993. ஆறு வயது சிறுமியின் கதையை அந்த சிறுமியின் பார்வையிலேயே சொல்லியிருப்பது இதனை குழந்தைகளுக்கான சினிமாவாக தூக்கி நிறுத்துகிறது. குழந்தைகளின் நிலையைப் பேசுகிறேன் என எந்த அதிகப்படியான செயல்களும் படத்தில் இல்லை.

பார்சிலோனாவில் இருந்து கிராமத்திற்கு வரும் பீரிடா அங்கே தன்னைப் பழக்கிக்கொள்ள நிறைய சிரமப்படுகிறாள். மேலும் அருகே இருக்கும் காடு அவளுக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது. அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் தனது அம்மாவைப் பற்றியும் அப்பாவைப் பற்றியும் தெரிந்துகொள்ள முற்படுவது என பீரிடாவின் செயல்களில் அனைத்திலும் குழந்தைத்தனம் நிரம்பியிருந்தாலும் தனக்கென அப்பா, அம்மா இல்லை என்பதன் வெளிப்பாடாகவே இது நிகழ்கிறது. அத்தையும் மாமாவும் பீரீடாவை நன்றாக பார்த்துக் கொண்டாலும் பீரிடாவிற்கு அது புரியவில்லை.

தனக்கென அப்பா, அம்மா இல்லாதது அனாவின் மேல் பொறாமை கொள்ள செய்கிறது, அவளது அத்தை, மாமாவை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இவை அனைத்தும் பீரிடாவின் செயல்களில் வெளிப்படும்போது குழந்தைகளுக்கே உரிய தன்மையோடு வெளிப்படுகிறது. அதானாலேயே என்னவோ பீரிடாவின் நிறைய செயல்கள் ரசிக்க வைக்கின்றன. அதே போல அனாவும் சேட்டைகளும் பீரிடாவை விட்டுத்தராத குணமுமாக ரசிக்க வைக்கிறாள். பீரிடாவும் அனாவும் இருக்கும் காட்சிகளே அதிகம் இருப்பதால் அழகியலுக்கு பஞ்சமில்லை.

பீரிடாவின் பெற்றோர் எய்ட்ஸ் பாதிப்பினால் இறந்துவிட்டதால் பீரிடாவும் அதே பார்வையில் மற்றவர்களால் பார்க்கப்படுவது, மற்றொரு சிறுமியான அனாவுடன் விளையாடும் காட்சிகள், பீரிடாவின் அத்தையாக இருந்தாலும் அம்மாவாக பார்த்துக்கொள்ளும் மர்க, ஒரு இரவில் பீரிடாவிடம் அனா காட்டும் அன்பு என பல்வேறு நெகிழ்ச்சியான அனுபவங்கள் படத்தில் இருக்கின்றன.

பொறாமையில் பீரிடா செய்யும் செயல்கள் பிரச்சனையை கொண்டு வந்தாலும் அதன்பின் பீரிடா செய்யும் செயல்கள் அவளை ஒருபோதும் வெறுக்க வைப்பதில்லை. முக்கியமாக வீட்டை விட்டு ஓட முயற்சிக்கும் காட்சியில் பீரிடா செம்ம.. பீரிடாவின் அம்மா வழி உறவுகள்தான் தொடர்ந்து பீரிடாவை கவனித்துக் கொள்கின்றனர். அவளது அப்பாவை பற்றிய செய்திகள் எங்கேயும் இல்லை. கதை அனைத்தும் 1993 லேயே நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எய்ட்ஸ் குறித்தான புரிதல் பரவலாக இல்லை என்பதையும் பதிவு செய்யத் தவறவில்லை இயக்குநர்.

படம் முழுவதுமே பீரிடாவின் பார்வையில் இருப்பதால் பெரும்பாலான பிரேம்களில் பெரியவர்கள் இருந்தாலும் பீரிடாதான் மையமாக இருக்கிறாள். அவர்களின் முகங்கள் கூட நிறைய நேரங்களில் தெரிவதில்லை. இப்படியான ஒளிப்பதிவு பீரிடாவுடன் இன்னும் ஒன்ற வைக்கிறது. அதே போன்று கிராம்ப்புறங்களில் சுற்றி விளையாடும் அனாவையும் பீரிடாவையும் அவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளின் அழகியலை அப்படியே உணரச் செய்ததிலும் ரசிக்க செய்ததிலும் படக்குழு வெற்றி பெற்றிருக்கிறது.

பெற்றோரை இழந்த குழந்தைகளை எவ்வளவுதான் நன்றாக பார்த்துக்கொண்டாலும் அவர்களது பெற்றோராகிவிட முடியாது. அதே நேரத்தில் அந்த குழந்தைகளுக்கு இதனை புரிய வைக்கலாம். அதன்மூலம் அவர்கள் பெற்றோரை நினைத்து ஏங்குவதை குறைக்கலாம் என்பதே சம்மர் 1993 சொல்வதாக இருக்கிறது. மேலும் குழந்தைகளின் செயல்கள் எல்லாமே ரசிக்கப்பட வேண்டியவையே எனவும் பீரிடா சொல்கிறாள். அவர்களை வழிநடத்தவே நாம் இருக்கிறோம் அவர்களை தண்டிக்க இல்லை என்தையும் பீரிடா புரிய வைக்கிறாள். குழந்தைகளை விட பெரியவர்களாகிய நாமே பீரிடாவை பார்க்க வேண்டும் நமது குழந்தைகளைப் புரிந்துகொள்ள…

சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக 90 வது ஆஸ்கார் விருதுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது சம்மர் 1993. மேலும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதையும் சிறந்த படத்திற்கான ஜீரி விருதையும் பெற்றுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x