Published : 04 Oct 2023 05:06 PM
Last Updated : 04 Oct 2023 05:06 PM
டெல்லி: சில்லறை வணிகர்களுக்கு எதிரான விளம்பரத்தை தயாரித்த ஃப்ளிப்கார்ட் மீது நடவடிக்கை கோரியும், அதில் நடித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க கோரியும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஏடி) சார்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
ஆன்லைன் வணிகத் தளமான ஃப்ளிப்கார்ட்டில் ‘பிக் பில்லியன்டே’ விற்பனையையொட்டி விளம்பரம் ஒன்று வெளியிடபட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ளிப்கார்ட்டில் தருவது போன்ற சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று அமிதாப் விளம்பரத்தில் பேசியிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. .
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோரை தவறாக வழி நடத்தும் இந்த விளம்பரத்தை தடை செய்யவும், ஃப்ளிப்கார்ட்டுக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடமிருந்து ரூ.10 லட்சம் அபாரத தொகையை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஏஐடியின் தேசிய தலைவர் பிசி பார்தியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், “ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் பாதித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன் இதுபோன்ற விளம்பரத்தில் நடிப்பதால், எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும். ஆகவே இந்த விளம்பரத்தை தடை செய்து, அபராதம் விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT