Last Updated : 04 Oct, 2023 01:37 PM

 

Published : 04 Oct 2023 01:37 PM
Last Updated : 04 Oct 2023 01:37 PM

Bigg Boss 7 Analysis 1 - பவா சொன்ன ‘ஓட்டம்’ கதையும், கூல் சுரேஷின் எதிர்வினையும்!

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி, அக்டோபர் 1 அன்று தொடங்கிய 7-வது சீசனில் கூல் சுரேஷ், எழுத்தாளர் பவா செல்லதுரை, பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, நிக்சன், வினுஷா தேவி, மணி சந்திரா, அக்‌ஷயா, ஜோவிகா, ஐஷு, மாயா கிருஷ்ணன், சரவணன், யுகேந்திரன், விசித்ரா, அனன்யா ராவ், விஜய் வர்மா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளிலேயே சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது ‘கதை சொல்லி’ பவா செல்லதுரையில் பிக் பாஸ் என்ட்ரிதான். ‘ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்’, ‘எதற்கு இந்த வேண்டாத வேலை’ என்று இலக்கிய வட்டங்களில் இருந்து குரல்கள் எழுந்ததை காணமுடிந்தது. அதற்கு ஏற்றாற்போல் ஆரம்பத்தில் யாரிடமும் ஒட்டாமல் மிகவும் அமைதியாக இருந்தவர், போகப் போக அனைவரிடமும் கொஞ்சம் சகஜமாக பழகத் தொடங்கியுள்ளார். ஆனால், அவரது வயது மற்றும் அமைதியைக் காரணமாக சொல்லி பலரும் அவரை நாமினேட் செய்தனர்.

பவாவின் அமைதிக்கு வயது இடைவெளியும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தன்னை மரியாதையுடன் ‘ஐயா’ என்று அழைத்த வீட்டின் முதல் தலைவர் விஜய் வர்மாவிடம், தன்னை ஐயா என்று அழைக்க வேண்டாம் என்றும், ‘ப்ரோ’ அல்லது ‘பவா’ என்று பெயர் சொல்லி அழையுங்கள் என்றும் கூறினார் பவா செல்லதுரை. மரியாதை கொடுப்பதற்காக அவ்வாறு அழைத்ததாக விஜய் வர்மா கூறியும், அவர் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டார். தலைமுறை இடைவெளியில் இரு தரப்புக்குமே தடுமாற்றம் இருப்பதை இது உணர்த்தியது.
நாமினேட் செய்யப்பட்டவர்கள் தனியாக ஒரு வீட்டில், (ஸ்மால் பாஸ் வீடு) அடைக்கப்பட வேண்டும் என்பது புதிய விதி. சமையலும் அவர்களே செய்யவேண்டும் என்பதால், இந்த வாரத்துக்கான சமையல் குழுவில் பவா செல்லதுரையும் இடம்பெற்றார். தான் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்தது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு முதல் நாளே தன்னுடைய செயலால் பதிலளித்தார் பவா செல்லதுரை. சமையலின் ருசி குறித்து பாராட்டியவர்களிடம் ‘பெண்களிடம் எப்போதும் சமையல் நன்றாக இருக்கிறது என்று சொல்லக் கூடாது. அப்படி செய்தால் அதை அவர்கள் மனதில் பதியவைத்துக் கொண்டு சமையலிலேயே முடங்கி விடுவார்கள்’ என்று பவா செல்லதுரை கூறியது ரசிக்க வைத்தது. போகிற போக்கில் ஓர் ஆழமான கருத்தை அவர் பதியவைத்துச் சென்றது பாராட்டத்தக்கது.

அதேபோல இரவு, தனியாக அடைக்கப்பட்டிருந்த ஸ்மால் பாஸ் வீட்டின் உறுப்பினர்களும், பிக் பாஸ் வீட்டின் உறுப்பினர்களும் பேசிக் கொண்டிருந்தபோது, ஆதவன் எழுதிய ‘ஓட்டம்’ என்ற கதையை பற்றி மற்ற உறுப்பினர்களிடம் பவா சொன்னார். பள்ளி, கல்லூரி காலங்களில் ஓட்டப் பந்தய வீராங்கனையாக இருந்த ஒரு பெண், திருமணம் என்ற பந்தத்தால் தன் கனவுகளை தொலைத்து வீட்டுக்குள் முடங்கிறார். தன் மகன் பள்ளிக்கு டிபன் பாக்ஸை மறந்து வைத்துவிட்டுச் சென்றதால் அதைக் கொடுப்பதற்காக எந்த கவலைகளும் இன்றி மீண்டும் பழையபடி ஓடுகிறார் அந்தப் பெண்.

இப்படியாக செல்லும் அந்தக் கதையை உணர்ச்சி பொங்க பவா கூறியதைக் கேட்டு பிரதீப் ஆண்டனி கண்ணீரே வடித்துவிட்டார். “திருமணம், குடும்பம் மட்டுமே மனித வாழ்க்கை இல்லை. கலையுடன் தொடர்புடையவர்களை குடும்பம் என்னும் அன்பின் வன்முறை முடக்கிப் போட்டு விடும்” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே ஆட்டையைக் கலைக்கும் விதமாக, கண்கலங்கியபடி பேசிய கூல் சுரேஷ் “நான் எவ்வளவு லேட் ஆக வந்தாலும், ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தாலும் என் மனைவிதான் என் குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார். அனுபவத்துல சொல்றேன்... மனைவி ரொம்ப முக்கியம் சார்” என்று பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு தொண்டை விம்ம பேசி முடித்தார்.

அந்தக் கதையின் மூலம் குடும்ப வன்முறை குறித்தும், பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்த பவா செல்லதுரையின் கருத்தை ஒரே வரியில் நீர்த்துப் போகச் செய்தார் கூல் சுரேஷ். அவ்வளவு நேரம் அந்தக் கதையை கேட்டும் கூட தன் மனைவியின் அந்த நிலைக்கு காரணம் யார் என்ற பிரஞ்கை கூட அவருக்கு எழவில்லை. மாறாக, தன் மனைவியின் தியாகத்தை நினைத்து நெக்குருகி நெகிழ்ந்து பேசி தன்னையே அறியாமல், அந்தக் கதை சொல்ல வரும் கருத்தையே மழுங்கடிக்கச் செய்தார் கூல் சுரேஷ்.

இதே கதையை திரைப்படமாக இயக்கியிருப்பார் இயக்குநர் வசந்த். ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற அந்த ஆந்தாலஜி சினிமா ‘சோனி லிவ்’ ஓடிடியில் காணக் கிடைக்கிறது. குடும்பக் கட்டமைப்பின் நிர்பந்தத்தால் தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் இழந்துவிடுகிற சிவரஞ்சனிகளை கச்சிதமாக காட்சிமொழியில் பதிவு செய்யப்பட்டிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x