Published : 02 Oct 2023 05:32 AM
Last Updated : 02 Oct 2023 05:32 AM
ஜெமினி கணேசன், சவுகார் ஜானகி, ஜெயந்தி, நாகேஷ், வி.எஸ்.ராகவன், எஸ்.என்.லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜோசப் ஆனந்தனின் ‘இரு கோடுகள்’ நாடகம் அப்போது வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்தக் கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதி அதே பெயரில் இயக்கினார் கே.பாலசந்தர்.
காசியில் சவுகார் ஜானகியைப் பார்க்கும் ஜெமினி கணேசன், அவரைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஜெமினியின் குடும்பம் இதை ஏற்க மறுக்கிறது. இதனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. தாய்மை அடைந்த சவுகார் ஜானகியை மேற்கொண்டு படிக்க வைப்பார் அவர் அப்பா ராகவன். தமிழ்நாடு திரும்பும் ஜெமினி, ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். ஜெயந்தியை மணந்து, மூன்று குழந்தைகளுக்கும் தந்தையாகிறார். ஒரு கட்டத்தில் ஜெமினி வேலை பார்க்கும் அதே இடத்துக்கு கலெக்டராக வந்து நிற்கிறார் சவுகார் ஜானகி . ஒரே அலுவலகத்தில் மனைவி ஆட்சியர் கணவர் எழுத்தர். இருவரும் பழகும் விதத்தை வைத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாகேஷ் அண்ட் கோ, கிசுகிசு பரப்புகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற இந்தப் படத்துக்கு வி.குமார் இசை அமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதியிருந்தார். ஜமுனா ராணியும் பி.சுசீலாவும் பாடிய ‘புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக!’ பாடல் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட். படத்தின் கதையை அழகாகச் சொன்ன பாடல் இது. ‘மூன்று தமிழ்’, ‘நான் ஒரு குமாஸ்தா… நான் பாடுவேன் தமாஷா ’, ‘கவிதை எழுதிய’ ஆகிய பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
படத்தில், ஆட்சியர் சவுகார் ஜானகிக்கு முதல்வர் அறிவுரை சொல்வது போல ஒரு காட்சி இடம்பெறும். 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி, முதலமைச்சராக இருந்த அண்ணா காலமானார். அக்டோபரில் வெளியான இந்தப் படத்தில் அண்ணாவின் கேரக்டரை பயன்படுத்தி இருப்பார் கே.பாலசந்தர். அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் அண்ணாவைத்தான் முதலமைச்சராகக் காண்பித்தார். கலெக்டருக்கு ஆலோசனை சொல்வது போல் அண்ணாவின் குரல் படத்தில் வரும். முதலமைச்சர் இருக்கை, அண்ணாவின் கண்ணாடி ஆகியவற்றை வைத்து படமாக்கி இருப்பார்கள். இந்தக் காட்சி அப்போது வரவேற்பைப் பெற்றது. படத்துக்காக அண்ணாவின் குரலைப் பேசியவர், ‘பலகுரல் மன்னன்’ சிவகங்கை சேதுராசன் என்பவர்.
‘இரு கோடுகள்’ நாடகமாக நடத்தப்பட்டபோது, அதில் ஆட்சியராக நடித்தவர், லீலா என்பவர். அதைப் பார்த்த சவுகார் ஜானகி, தனக்கு ஆட்சியராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் நினைத்தார். நாடகம் படமாக்கப்பட்டபோது, அவர் நினைத்தது போலவே, கே.பாலசந்தர் அவருக்கே அந்த கேரக்டரை கொடுக்க, சவுகாரால் நம்பவே முடியவில்லை!
தமிழில் வெற்றிபெற்ற இந்தப் படம் தெலுங்கில், ‘கலெக்டர் ஜானகி’, கன்னடத்தில் ‘எரடு றெக்கேகளு’, இந்தியில் ‘சஞ்சோக்’ ஆகிய பெயர்களில் ரீமேக் செய்யப்பட்டது. 1969-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தத் திரைப்படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT