Published : 02 Oct 2023 05:06 AM
Last Updated : 02 Oct 2023 05:06 AM
சென்னையில் மிகக் கொடூரமாக இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதை நிகழ்த்தும் சீரியல் கில்லரை (ராகுல் போஸ்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல் உதவி ஆணையர்கள் அர்ஜுனும் (ஜெயம் ரவி) ஆண்ட்ரூவும் (நரேன்). இதில் ஒரு துர்நிகழ்வு நடைபெற, போலீஸ் வேலையை விட்டு ஒதுங்குகிறார் அர்ஜுன். என்றாலும் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறான் சைக்கோ கொலையாளி. இதற்கு என்ன காரணம்? யார் அந்தக் கொலையாளி? இருவருக்கும் இடையிலான துரத்தலில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன என்பது ‘இறைவ’னின் மீதிக் கதை.
சீரியல் கில்லர், சைக்கோ கொலைகள் தொடர்பான படங்கள் என்றால், அழகான ஒன்லைனை வைத்துகொண்டு துரத்தலும் திகிலும் கொண்ட திரைக்கதையை எழுதுவார்கள். ஆனால், வறட்சியான த்ரில்லர் கதைக்குத் திகில் முலாம் பூச முயன்றிருக்கிறார் இயக்குநர். விளைவு, சீரியல் கில்லர் படங்களுக்கே உரிய பரபரப்பு, படப்படப்பு, திருப்பங்கள் எதுவும் இல்லாமல் பயணிப்பது ‘இறைவ’னின் பலவீனம். தொடக்கத்திலேயே கொலையாளியைக் காட்டிவிடுகிறார்கள். எனவே, சஸ்பென்ஸ் உடைந்து, அவர் செய்யும் கொடூர கொலைகள் எல்லாமே பாவமாக இருக்கிறது.
கொலையாளி சைக்கோ ஆனதற்கான பின்னிணியைத் தெளிவாகச் சொல்லாதது படத்துக்கு மைனஸ். இடைவேளைக்கு முன் சொல்லப்படும் ஒரு திருப்பம் கவனம் பெறுகிறது. ஆனால், தெளிவற்ற பின்னணிக் கொண்ட திரைக்கதை, இரண்டாம் பாகத்தையும் சொதப்பிவிடுகிறது. கொலையாளி–நாயகன் இடையே எந்தத் துரத்தலும் இல்லை. சர்வ சாதாரணமாக கொலையாளியை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். சண்டைப் போடுகிறார். திரும்பத் திரும்ப நடக்கும் இந்தக் காட்சிகள் அயற்சிக்கு உள்ளாக்குகிறது. புதுமை இல்லாமல் நகரும் காட்சிகளால் படம் தள்ளாடுகிறது.
இளம் பெண்களைக் கொலை செய்ய கொலையாளி சொல்லும் காரணங்களில் தர்க்கமே இல்லை. ஊரையே நடுங்க வைக்கும் அளவுக்கு கொலைகள் செய்து மருத்துவமனை சிறையில் இருக்கும் கொலையாளி சுலபமாகத் தப்புவது போலீஸுக்கே அடுக்காது. இப்படி படம் முழுக்க நிறைய பூச்சுற்றல்கள்.
‘எனக்கு பயம்னா என்னென்னே தெரியாது’ என்று பல வெரைட்டிகளில் கோபம் காட்டும் ஜெயம் ரவி, அர்ஜுன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். நண்பன் நரேனுக்காக உருகுவது, நயன்தாராவிடமிருந்து விலகி நிற்பது, நெருக்கமானவர்கள் கொலையாகும்போது பதறுவது என நடிப்பில் குறை வைக்கவில்லை. நயன்தாரா, ஒருதலையாகக் காதலித்து உருகும் பெண்ணாக வந்துபோகிறார். சைக்கோவாக ராகுல் போஸ், தன் பணியைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். அவரின் தொடர்ச்சியாக வரும் வினோத் கிஷன் மிகை நடிப்பால் திணறடிக்கிறார். நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, சார்லி, அழகம் பெருமாள், பக்ஸ், விஜயலட்சுமி ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை. இருட்டில் நடக்கும் கொலைகளைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரி கே. வேதாந்தம். இழுவையான காட்சிகளுக்கு கருணையின்றி கத்திரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் ஜே.வி. மணிகண்ட பாலாஜி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT