Published : 01 Oct 2023 12:15 PM
Last Updated : 01 Oct 2023 12:15 PM
ரஜினிகாந்தின் டாப் 10 படங்களில், ‘மூன்று முகம்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு. மூன்று வேடங்களில் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் அலெக்ஸ்பாண்டியன், ஆல்டைம் லைக்ஸ் அள்ளும் அலாதி கேரக்டர். ஏ. ஜெகந்நாதன் இயக்கிய இந்தப் படத்தில் அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் ஆகிய பாத்திரங்களில் மிரட்டியிருப்பார், ரஜினி.
ராதிகா, செந்தாமரை, சத்யராஜ், தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா, ராஜலட்சுமி, கமலா காமேஷ், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ் என ஏகப்பட்ட நடிகர்கள். ஏ.ஜெகந்நாதன், ரஜினியை முதன் முதலாக இயக்கிய படம் இது. அடுத்து ‘தங்கமகனை’ இயக்கியவரும் இவர்தான்.
மூன்று கேரக்டரில் 2 கேரக்டரை தனித்தனி விக் மூலம் வித்தியாசப்படுத்தி இருப்பார் ரஜினி. இதில் அலெக்ஸ் கேரக்டருக்காக, தனது முகத்தை நீளமாக காட்டிக் கொள்ளசிறப்பு பல்செட்டை வைத்துக் கொண்டார் ரஜினி. அப்பாவைக் கொன்றவனை மகன் பழிவாங்கும் கதைதான். என்றாலும் அதைத் திரைக்கதையில் சுவாரஸ்யமாக்கி, திரையரங்கில் கைதட்டல்களைப் பெறவைத்திருப்பார், இயக்குநர்.
ரஜினி பல போலீஸ் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் இதில் அவர் ஸ்டைலும் வேகமும் வேறு ரகம். அவர் கழுத்து ‘டை’யை ஸ்டைலாக திருகிக் கொண்டு பேசும் அந்த மேனரிசம், ஆஹா. சாராய வியாபாரி செந்தாமரைக்கும் அலெக்ஸ் பாண்டியனுக்குமான மோதலில் இருவரும் பேசும் வசனங்களில், அள்ளித் தெறிக்கும் அனல். பீட்டர்செல்வகுமாரின் அந்த வசனங்கள் இன்றுவரை பிரபலம்.
‘தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் தீப்பிடிக்கும், ஆனா, இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம்உரசுனாலும் தீப்பிடிக்கும்’, ‘இந்த அலெக்ஸ் பாண்டியன் வர்றான்னு சொன்னாலே, தப்புத் தண்டா செய்றவங்களுக்குஎல்லாம் சின்ன வயசுல அவங்க அம்மாகிட்ட குடிச்ச பால் எல்லாம் வெளிய வந்துடாது?’ என அவர் பேசும் வசனங்கள் அப்போது ரசிகர்களுக்கு மனப்பாடம்.
இந்தப் படத்துக்காக, தமிழக அரசின் ‘சிறந்த நடிகர்’ என்னும் சிறப்பு விருதைப் பெற்றார் ரஜினி. அலெக்ஸ் பாண்டியன் கேரக்டருக்கு ஈடுகொடுத்து, மிரட்டியிருப்பார் வில்லன் ஏகாம்பரமான செந்தாமரை. மீசையை திருகிக்கொண்டே அவர் சிரித்தபடி பேசும் வசனங்களில் மிரட்டல்.
சங்கர் – கணேஷ் இசையில், ‘தேவாமிர்தம் ஜீவாமிர்தம்’, ‘ஆசையுள்ள ரோசக்காரமாமா’, ‘நான் செய்த குறும்பு’ , ‘எத்தனையோ பொட்டப்புள்ள’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருந்தன. 1983-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தத் திரைப்படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT