Published : 26 Sep 2023 10:13 AM
Last Updated : 26 Sep 2023 10:13 AM

ஜெமினி கணேசன் அறிமுகமான படம்: மிஸ் மாலினி

ஆர்.கே.நாராயண் எழுதிய ‘மிஸ்டர் சம்பத்’ நாவலை மையமாக வைத்து, கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை எழுதி இயக்கிய படம், ‘மிஸ் மாலினி’. ஜெமினி தயாரித்த இந்தப் படத்தில் சுப்புவே கதாநாயகனாகவும் நடித்தார். கதாநாயகி மாலினியாக நடித்தவர் புஷ்பவல்லி. ஜாவர் சீதாராமன், எம்.எஸ்.சுந்தரி பாய், எஸ்.வரலட்சுமி உட்பட பலர் நடித்தனர். இதில்தான் ஜெமினி கணேசன் சிறிய வேடம் ஒன்றில், அதாவது உதவி இயக்குநராக அறிமுகமானார்.

வறுமை நிலையில் இருக்கும் மாலினியைத் தோழி சுந்தரி, கலாமந்திரம் என்ற நாடக நிறுவனத்தில் சேரும்படி கூறுகிறார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தந்தையைக் காப்பாற்றுவதற்காக அங்குச் சேர்கிறார். குறுகிய காலத்திலேயே மாலினி பிரபலமாக, ‘பிட் நோட்டீஸ்’ சம்பத்துடன் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன் தோழி சுந்தரி உட்பட அனைவரையும் விட்டுவிட்டு, சம்பத்தை முழுமையாக நம்புகிறார். தனியாக நாடக நிறுவனம் தொடங்குகிறாள். புதிய நிறுவனம் முன்னேறுகிறது. ஒரு கட்டத்தில் கடன் சுமை ஏற்பட, சம்பத் உட்படஅனைவரும் மாலினியைக் கைவிடுகிறார்கள். பழைய நிலைக்கே அவள் திரும்புகிறாள்.தோழி சுந்தரி உதவியுடன் பழைய கலாமந்திரத்துக்குத் திரும்பி தன் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்குவது கதை.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் உணவுப்பொருட்களின் தட்டுப் பாடும் அதிகவிலையும் நிலவிய சென்னை வாழ்வை நுட்பமாகக் கிண்டலடித்த படம் இது.

எஸ். ராஜேஸ்வர ராவ், பரூர் எஸ்.அனந்தராமன், பி.ஏ. சுப்பையா பிள்ளை இசை அமைத்த இந்தப் படத்தில் மொத்தம் 8 பாடல்கள். ஒரே ஒரு பாடலைத் தவிர அனைத்துப்பாடல்களையும் கொத்தமங்கலம்சுப்புவே எழுதினார். ‘காலையிலஎழுந்திருந்தா கட்டையோட அழுகணும்’ என்ற பாடலை எழுதியவர் சுரபி.அடுப்படியில் ஒரு பெண்படும் வேதனையை அழகாகச் சொன்ன இந்தப் பாடல் அப்போது ஹிட்.

இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. சம்பத் வேடத்தில் சுப்புவின் நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு சுப்புவை ‘பிட் நோட்டீஸ்’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள். அந்தக் காலகட்டத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொத்தமங்கலம் சுப்பு செல்லும்போது, சிறுவர்கள் ‘பிட் நோட்டீஸ்’ என்று கத்துவார்களாம்.

1947ம் ஆண்டு இதே தேதியில்தான் இந்தப் படம் வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x