Published : 25 Sep 2023 03:52 PM
Last Updated : 25 Sep 2023 03:52 PM
சென்னை: லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பதை சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் விஷால் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதி, நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை தாக்கல் செய்யாததால், விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பினார். விஷால் தன்னை நீதிமன்றத்தைவிட பெரிய ஆளாக எண்ண வேண்டாம். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள் என்றுகூறி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்த விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில், ஐடிபிஐ, ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி உள்ளிட்ட ஆறு வங்கிக் கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், முழுமையான தகவல்களை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, பதில்மனு தாக்கல் செய்ய லைகா நிறுவனம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT