Published : 13 Dec 2017 06:45 PM
Last Updated : 13 Dec 2017 06:45 PM
லோகேஷ் குமார் இயக்கத்தில் அனுபமா குமார், அஸ்வின்ஜித், அபிஷேக், கிஷோர் மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'என் மகன் மகிழ்வன்'. ஆஸ்திரேலியா மற்றும் நியூயார்க் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள இப்படம் முதன் முறையாக தமிழகத்தில் 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இத்திரையிடல் குறித்து இயக்குநர் லோகேஷ் குமார் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதாவது:
முழுக்க சென்னையில் உள்ள நடிகர்களே நடித்திருப்பதால், இந்த நாளுக்காக தான் 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். 13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டாக்ஸி' என்ற ஈரானிய படம் பார்த்தேன். ஈரானிய நாட்டில் படமே இயக்கக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள். அதையும் மீறி அவர் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கினார்.
ஒரு படம் எடுக்க இயக்குநர் இவ்வளவு கஷ்டப்படும் போது, ஏன் நமது படத்தை இப்போது தொடங்கக் கூடாது என்று எண்ணி ஆரம்பித்தோம். அடுத்த 2 ஆண்டுகளில் என் படம் திரையிடப் போகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
சராசரி குடும்பத்தில் பிறந்த மகனோ அல்லது மகளோ ஓர் பாலினச் சேர்க்கையாளர் என தெரியும் போது, தந்தை - தாய் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பது தான் 'என் மகன் மகிழ்வன்'. இதைப் பற்றி தெரியாத ஆட்கள் கூட, முழுக்க புரிந்து கொள்ளும் வகையில் தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். ஓர் பாலினச் சேர்க்கையாளரின் வாழ்க்கையைக் கொஞ்சம் ஆழமாக இப்படத்தில் பேசியிருக்கிறேன். தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதன் மூலம், இப்படம் ரொம்ப விரசமாக இல்லாமல், தந்தை - தாய் பார்வையிலிருந்து பேசும் படமாக இருக்கும் என்பது வெளிப்படை.
தமிழ் சினிமா அடுத்தாண்டுடன் 100 வருடங்கள் முடியப் போகிறது. இந்த 100 ஆண்டுகளில் ஓர் பாலினச் சேர்க்கையை இவ்வளவு ஆழமாக யாரும் சொன்னதில்லை. சில படங்களில் லேசாக கூறியிருப்பார்கள். மிகவும் கஷ்டப்பட்டு படமாக்கியிருக்கிறோம். சமூகத்திற்கு இப்படம் மிகவும் முக்கியம். அதனால் தான் நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம்.
நாங்கள் கூறியிருக்கும் கருத்துகள் நிறைய மக்களிடையே போய் சேர வேண்டும். சென்னை திரைப்பட விழாக்களில் படம் பார்க்க வருபவர்களை நம்பித்தான் என்னைப் போன்ற இயக்குநர்கள் படம் பண்றோம். மற்ற திரைப்பட விழாக்களில் கிடைத்த வரவேற்பை விட சென்னை திரைப்பட விழாவில் இன்னும் அதிக வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன். நாளை (டிசம்பர் 15) மதியம் 3 மணியளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில் திரையிடப்பட இருக்கிறது. அனைவரும் இப்படத்தைப் பார்த்து, மற்றவர்களையும் பார்க்க வைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT