Published : 29 Aug 2023 07:08 AM
Last Updated : 29 Aug 2023 07:08 AM
நடிகர் சிவகுமாரை வித்தியாசமானத் தோற்றங்களில் காட்டிய திரைப்படங்களில் ஒன்று, ‘வண்டிச்சக்கரம்’. அவரை மென்மையான கதாபாத்திரங்களில் அதிகமாகப் பார்த்த ரசிகர்கள், கம்பீரமானத் தோற்றத்துடனும் ஆக்ரோஷமானப் பார்வையுடனும் வேறொருவராகப் பார்த்தனர் இதில்.
மேனி தெரியும் வெள்ளை ஜிப்பா, லுங்கிக்கு மேல் தடித்த பெல்ட், பெரிய மீசை என சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அவர் வரும் முதல் காட்சியே மிரட்டலாக இருக்கும். சிவகுமார் இதில் கஜா என்கிற மார்க்கெட் தாதாவாகவே மாறியிருப்பார்.
விவேகானந்தர் பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் மணி தயாரித்திருந்த இதன் கதை, வசனத்தை எழுதியவர், நடிகர் வினு சக்கரவர்த்தி. படத்தை கே.விஜயன் இயக்கி இருந்தார். சிவாஜியின் ‘தீபம்’, ‘அண்ணன் ஒரு கோயில்’, ‘தியாகம்’, ‘திரிசூலம்’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இவர்.
சிவகுமாருடன் சரிதா, சிவசந்திரன், சுருளிராஜன் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் ‘சில்க்’ என்ற பெயரில் சாராயக்கடை நடத்தும் பெண்ணாக அறிமுகமாகி இருந்தார் ஸ்மிதா. பிறகு இந்த ‘சில்க்’, அவர் பெயரோடு ஒட்டிக் கொண்டது.
சங்கர்- கணேஷ் இசை அமைத்த இதன் பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதியிருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் வந்த ‘வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை’ பாடல் சூப்பர் ஹிட். இது சிவகுமாருக்கானப் பாட்டு. அந்தப் பாடல் காட்சியில் நடித்தால் கஜா கதாபாத்திரத்தின் கம்பீரம் குறைந்து விடும் என்பதால் சில்க் சாராயம் ஊற்றித் தர, அதைக் குடித்துக் கொண்டே சிவகுமார் ரசிப்பதாகக் காட்சியை அமைத்திருப்பார்கள்.
இதன் படப்பிடிப்பு முழுவதும் மைசூரில் நடந்தது. அங்குள்ள தேவராஜா மார்க்கெட்டில் படம் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை. இந்தப் படத்துக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரிவித்திருக்கிறார் சிவகுமார்.
இந்தப் படம் சிவகுமாருக்கு நூறாவது படமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ முந்திக் கொண்டது.
1980-ம் ஆண்டு இதே நாளில்தான் ரிலீஸ் ஆனது, காலச்சக்கரம் சுழன்றாலும் மறக்க முடியாத ‘வண்டிச்சக்கரம்’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT