Last Updated : 25 Aug, 2023 10:49 PM

 

Published : 25 Aug 2023 10:49 PM
Last Updated : 25 Aug 2023 10:49 PM

“பூபாள ராகம் பெத்து தந்த ஒரு கருவின் இசை என் தேசிய விருது” - ஸ்ரீகாந்த் தேவா சிறப்பு பேட்டி

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

'வாழ்த்துகள் சார்...' என்றவுடன் பெரும் புன்னகைகையைப் பரிசாகத் தந்து ‘வெற்றி... வெற்றி... ஜெயிக்கிறோம்!’ என்றபடி கையைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

தேசிய விருது பெற்றிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் கூறுவதற்காக தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சலிக்காமல் எடுத்துப் பேசிக்கொண்டே ‘மகிழ்ச்சி’ என்னும் இசையை தனது குரல் வழியே காற்றில் இசைத்து பரப்புகிறார். ஒரு அழைப்பில் கூட ;ஹலோ... ம் சொல்லுங்க' என்பது போன்ற எதார்த்த வார்த்தைகளே இல்லை. அத்தனைக்கும் பதிலாக எதிர்புறத்தில் இருப்பவர்களிடம் ‘வெற்றி... வெற்றி... ஜெயிக்கிறோம்!’ என்னும் நேர்மறை எண்ணத்தை மட்டுமே மந்திரமாக பிரபஞ்சத்தில் சிதறடிக்கிறார்.

இதைப் பார்த்ததுமே நான் அவரிடம், சார் உங்களின் இவ்விருதுக்கு இந்த வார்த்தைகளும் ஒரு காரணமா என்றதுக்கு, 'ஆமாம்... நிச்சயமாக. நான் நம்புகிறேன். ஆனால், அதற்காக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வெறுமனே சொன்னால் மட்டும் போதாது. நான் அதற்காக பிரதிபலன் பாராமல் உழைத்தேன்' என்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

இயக்குனர் கணேஷ் பாபு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரித்த ‘கருவறை’ குறும்படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவரை நேரில் சந்தித்துப் பல கேள்விகளை முன் வைத்தேன்.

‘தேசிய விருது’ கிடைத்ததை எப்படி பார்க்கிறீர்கள்? இதனை முன்பே எதிர்பார்த்தீர்களா?

‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்துக்கு எனக்கு ஸ்டேஜ் விருது கிடைத்தது. ‘ஈ’ படத்தில் இன்டர்நேஷனல் விருது கிடைத்தது. ஆனாலும், இந்த தேசிய விருது எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது என்பதே அது தனி மகிழ்ச்சிதான்.

இந்த விருது அறிவிக்கப்பட்டது எனக்குத் தெரியாது. நான் அன்று குடும்பத்துடன் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த தொலைபேசி அழைப்பில் நண்பர் ஒருவர், தொடர் வார்த்தைகளுடன்... வாழ்த்துக்கள் அண்ணே என்றார். சரியாக டவர் இல்லாததால் என்னால் அதனை கேட்க முடியவில்லை. எதற்கு என்று கேட்பதற்குள் வைத்து விட்டார். நெட்வொர்க் கிடைக்கவில்லை. அடுத்த வந்த அழைப்பிலும் அதேபோல் எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். எதோ மகிழ்ச்சியான விஷயம் என்று மட்டும் நினைத்தேன். உடனே நான் பாதியில் சாப்பிட்ட கையோட ரெஸ்டாரண்டின் வெளியே வந்து விட்டேன். அடுத்தடுத்து வந்த அழைப்புகளில் சிறந்த இசைக்காக தேசிய விருது என்பதை நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால், என்ன படத்திற்காக என்றால், அவரால் சொல்ல முடியவில்லை. என்னால் இன்னும் அதனை உறுதி செய்ய முடியாமல் ரெஸ்டாரண்ட் வெளியிலேயே நின்று கொண்டிருக்கிறேன். உள்ளே சென்று குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளலாமா என்றால் அதற்கும் வழியில்லை. எந்தளவுக்கு நிஜம் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்பதால் ஒருவிதமான தவிப்பில் நின்றிருந்தேன்.

அப்போது தான் தம்பி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து அண்ணன் 'கருவறை' படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது என்றார். 'கருவறை', ஆமாம், அது 2021-ம் ஆண்டில் பண்ணிய படம் என்பது ஞாபகத்துக்கு வர `கடவுளே' என்று அவரை நினைத்துக்கொண்டேன். உண்மையைச் சொல்லணும்னா அந்த ரெஸ்டாரண்டிற்குத்தான் நான் அடிக்கடி செல்வேன். ஆனால், அன்று அந்த ரெஸ்டாரண்டே எனக்குப் புது இடமாகத் தெரிந்தது. விஷ்வல் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்குள்ளாக எனது குடும்பத்தினர் அனைவரும் இவர் என்ன கைகூட கழுவாமல் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கிறார் வருகிறாரா இல்லையா என்று எட்டி எட்டிப் பார்த்துகொண்டே இருக்கிறார்கள்.

நான் மறுபடியும் ரெஸ்டாரண்ட் உள்ளே வந்தவுடன், விஷயத்தை உடனே அவர்களிடம் சொல்லாமல், முதலில் மொபைலில் செல்ஃபி வீடியோவை ஆன் செய்தபடி, இப்பொழுது உங்களிடம் ஒரு குட் நியூஸ் சொல்ல போகிறேன்... எனக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்றேன். அவ்வளவுதான் அவர்கள் அனைவரும் அப்படியே துள்ளி குதித்து என் மனைவி, இரண்டு குழந்தைகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நானும் கூட இந்தளவு இதுவரையில் மகிழ்ந்ததில்லை. அன்றைய நொடிப்பொழுதில் அத்தனை மகிழ்ச்சி.

அப்பா இசையமைப்பாளர் தேவாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?

நாங்கள் ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே வரவும் அப்பாவிடம் இருந்து கால் வந்துகொண்டே இருந்தது. நான் நேரில் போய் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரது அழைப்பை எடுக்கவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் வீட்டில் இருந்தேன். வந்ததும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினேன். அப்போது அப்பா கண்கள் கலங்கியபடியே, 'நான் தேசிய விருது வாங்கியிருந்தால்கூட இந்த அளவு சந்தோஷம் பட்டிருக்கமாட்டேன்பா... நீ வாங்கியது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது' என்றார்.

நான் இதுவரையில் அப்பா எந்த விஷயத்திற்கும் அதிகமான உணர்வுகளைக் காட்டியதைப் பார்த்ததே இல்லை. அது சந்தோஷத்திலும் சரி. டென்ஷனிலும் சரி. எப்போதும் அப்பா சாதாரணமாகத்தான் இருப்பார். வெளியே எதனையும் காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால், அன்று அவரை மீறி என்னிடம் மகிழ்ச்சியைக் காட்டினார். அப்போதும் கூட பெரிதாக ஒன்றும் சொல்லாமல், ரொம்ப நல்ல விஷயம்பா... கடவுளுக்கு நன்றிப்பா என்று மட்டும் கூறினார். ஆனால், அதன்பிறகு அவரின் நண்பர்களிடம் எல்லாம் தெரியும்ல ஸ்ரீகாந்த் விருது வாங்கிட்டான் என்றபடி தொலைபேசியில் அழைத்து பெரும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். வீட்டுக்கு வந்திருந்த மீடியாக்கள் எல்லோரிடமும் நன்றி கூறி கொண்டிருந்தார். கூடவே, என்னிடம் இதற்குப் பிறகுதான் மிகவும் நிதானமாகவும், அதேபோல ஒவ்வொரு படத்துக்கும் அவார்டு வாங்க வேண்டிய அளவு உழைக்கவேண்டிய உழைப்பும் போட வேண்டும் என்று சில அறிவுரைகளைக் கூறினார். அந்த வகையில் ஆகஸ்ட் 24 எனக்கு மிகவும் மறக்க முடியாத நாள்.

சமீப காலங்களாக நீங்களும் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபுவும் தொடர்ச்சியாக இணைந்து இயங்கி கொண்டிருக்கிறீர்களே? அவர் பற்றியும் இந்த இசை உருவானது பற்றியும் சொல்லுங்கள்?

எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு விருதுதான் எப்பொழுதும் பெரிய டானிக். அதனை இந்த குறும்படத்தின் மூலம் எனக்கு கிடைக்க வழி செய்திருக்கிறார் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு. அந்தவகையில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டில் எனது பெயர், இயக்குனர் பெயர் குறிப்பிட்டு பாராட்டியதையும் நான் பெருமையாகப் பார்க்கிறேன்.

இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கட்டில்’ படத்திற்காக இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் இந்த குறும்படம் பற்றி இயக்குனர் தெரிவித்தார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. அதற்கு யார் மியூசிக் டைரக்டர் என நான் கேட்க, நீங்கள் தான் என்றார். ஆனால், எனக்கு ஒரே நாளில் இந்தப் படத்துக்கான இசை வேண்டும் என்றார். அப்படியான ஒரு சூழலில் பிறந்தது தான் இந்த குறும்படத்தின் இசை. இதனை நான் கருவறைக்குள் இருக்கும் குழந்தையின் அசைவுக்கு தகுந்தாற்போல யோசித்து பண்ண வேண்டும். ஆனாலும் எனக்கு நேரம் மிகவும் குறைத்து கொடுத்திருப்பதால் அந்த இசையை மறுபடியும் மெனக்கெடலோடு சரி செய்துகொள்ள கூடுதலாக ஒரு நான்கு மணி நேரம் வாங்கி, அந்த நாளின் தொடக்கத்திலேயே அதற்காக உழைத்தோம். இரவிலேயே அந்த ரெக்கார்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். உடனே நான் பாடகி தீபிகா தியாகராஜனுக்கு கால் பண்ணுகிறேன். ஒரு பாடல் அவசரமாக ரெக்கார்டிங் முடிக்க வேண்டும் வர முடியுமா என்று கேட்கிறேன். அப்போது நேரம் இரவு 9.30 மணி. அதற்கு அவர் எதுவும் யோசிக்காமல், அண்ணா கண்டிப்பாக நான் வருகிறேன் என்று வந்து பாடி கொடுத்தார். அன்று நான், சவுண்ட் இன்ஜினீயர் சரண், தீபிகா தியாகராஜன், இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு மட்டும் இருக்கிறோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இவர்கள் எல்லாம் எனக்காக அன்று உதவியவர்கள்.

முக்கியமாக இந்த விருது கிடைப்பதுக்கு என்ன காரணம் என்றால், கதையின் நாயகிக்கு வயிற்றில் ஒரு கரு உருவாகிறது. நாம உருவாகிவிட்டோம் என்று அப்போது அந்த கரு சந்தோஷப்படுகிறது. அந்த கருவின் சந்தோஷம் தான் அந்த இசை. எப்பொழுதுமே நாம் ஒரு மழலைக்கு ஒரு இசை சுலபமாக அமைக்கலாம். காதலர்கள் என்று கண்ணில் காண்பனவற்றிற்கு எல்லாம் சுலபமாக பண்ணிவிடலாம். ஆனால், வயிற்றுக்கு உள்ளே இருக்கும் கருவிற்கு, அதன் சந்தோஷம் மற்றும் அதனுடைய ஏனைய உணர்வுகளுக்கு ஏற்ப, அதனை நாம் பார்க்கவே முடியாதபோது, எப்படி இசை அமைக்க முடியும். அப்படி யூகித்து அமைத்தது தான் இந்த கருவுக்கான இசை.

ஒரு கருவைச் சுமக்கும் தாய் அதிகாலை எழுந்தவுடன் தன் வயிற்றை வாஞ்சையுடன் தடவிப் பார்ப்பார். அப்போது வயிற்றுக்குள் இருக்கும் கருவிற்கு பூபாள ராகத்தினூடே அந்த கரு என்ன ஃபீல் பண்ணுகிறது என்பதற்கேற்ப நான் ஹம்மிங் கொடுத்தேன்.

அதன்பிறகு, மதிய நேரத்தில் அந்த கரு துள்ளலாக விளையாடும்... அதற்கு ஒரு வர்ஷினி ராகம். ரொம்ப மகிழ்ச்சியான ராகம். இதேபோல் இரவுக்கு அந்த கருவின் மனநிலைக்கேற்ப ஒரு ராகம், இப்படியாக சந்தோஷமாக இருக்கும்போது, கடைசியில் குடும்பத்தலைவன், அந்த கரு வேண்டாம் என்று கூறுகையில், கலையும் அந்த கருவின் மனநிலை புரிந்து கொடுத்திருப்பேன் ஒரு இசை. இந்த இசையை மெதுமெதுவாக என்னுடைய ஹம்மிங்கில் அந்த கருவின் கரையும் மனநிலையை அதனூடே உணர்த்தியிருப்பேன்.

உங்களின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

தேசிய விருது பெற்றிருக்கும் இந்த தருணத்தில் இதன் மூலம் விஜய் சார், அஜித் சார் போன்றவர்களுடன் திரும்பவும் படம் பண்ண ஆசைப்படுகிறேன். நான் எத்தனையோ ஊர் திருவிழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அங்கெல்லாம் நான் இசையமைத்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலிப்பதைப் பார்த்திருக்கிறேன். இனியும் அதேபோல் சீக்கிரம் அப்படியான ஒரு தருணம் அமையும் என்று இதன்மூலம் எதிர்ப்பார்க்கிறேன்.

- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

கருவறை டீசர்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x