Published : 22 Aug 2023 03:56 PM
Last Updated : 22 Aug 2023 03:56 PM

சந்திரயான்-3 மிஷனை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ் மீது காவல் துறையில் புகார் பதிவு

பெங்களூரு: சந்திரயான்-3 மிஷனை கிண்டல் செய்யும் தொனியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு சர்ச்சையான நிலையில், பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டப் போலீஸார் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரை, இந்து அமைப்பினர் அளித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தாதார். அதில், ஒரு நபர் பனியன், லுங்கியில் ஒரு கோப்பையில் இருந்து தேநீர் ஊற்றுவது போல் ஒரு கேலிச் சித்திரம் இடம்பெற்றிருந்தது. கூடவே "நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்திரயான்-3 மிஷனை ட்ரோல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ் பகிர்ந்த கருத்தால் கொந்தளித்த நெட்டிசன்கள், இந்தியாவின் ஒரு லட்சியப் பயணத்தை எள்ளி நகையாடிவிட்டதாக பிரகாஷ் ராஜுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

#justasking பதிவுகள்: நடிகர் பிரகாஷ் ராஜ் #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் நீண்ட காலமாக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதுவும் குறிப்பாக அவருடைய பால்ய வயது தோழியான எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷின் படுகொலைக்குப் பின்னர் அவருடைய விமர்சனங்கள் மிகக் கடுமையானதாகியுள்ளன.

இந்நிலையில், அவருடைய முந்தைய ட்வீட்களில் பிரதமரை டீ விற்கும் நபர் என்று பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளதால் நேற்று அவர் வெளியிட்ட கேலிச்சித்திரமும் பிரதமரை கிண்டல் செய்யவே பகிரப்பட்டது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

பிரகாஷ் ராஜ் பதிலடி: நெட்டிசன்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், "வெறுப்பு எப்போதும் வெறுப்பை மட்டுமே காணும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை சுட்டிக்காட்டியே நான் பதிவிட்டிருந்தேன். கேரள தேநீர் விற்பனையாளர்களை பகடி செய்யும் நகைச்சுவை அது. உங்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூட ரசிக்க முடியவில்லை என்றால். கொஞ்சம் வளருங்கள்" என்று கூறியுள்ளார்.

— Prakash Raj (@prakashraaj) August 21, 2023

மற்றுமொரு ட்வீட்டில் மலையாளி சாய்வாலா பற்றிய காமெடி குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாதோர் இந்த வலைப்பதிவில் படித்துத் தெரிந்து கொள்ளவும் என்று கூறி பகிர்ந்துள்ளார்.

— Prakash Raj (@prakashraaj) August 22, 2023

நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 மிஷனின் இலக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இதில் இந்த முறை எந்த சிக்கலும் இருக்காது என இஸ்ரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x