Published : 21 Aug 2023 08:51 PM
Last Updated : 21 Aug 2023 08:51 PM
அது ஒரு சிறு நகரம். நெரிசல் மிகுந்த சாலைகளில் அதுவும் ஒன்று. அச்சாலையின் குறுக்கும் நெடுக்குமாக எப்போதும் வாகனங்கள் அணிவகுத்த வண்ணமே இருக்கும். ஆட்டோ, இருசக்கர வாகனம், சைக்கிள், அரசுப் பேருந்து, கார் என படையெடுக்கும் அந்த சாலை காலை மற்றும் மாலை நேரத்தில் பரபரக்கும். ஆம், அது ஒரு கல்லூரிச் சாலை.
தற்போது சிறைச்சாலைக்கு இணையாக அந்தக் கல்லூரியின் மதில்சுவர் உயர்த்தப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு அப்படி இல்லை. இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள், மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கும் காகிதப்பூ மரங்கள்தான் காம்பவுன்ட் சுவர்போல் வரிசையாக வளர்ந்து நிற்கும். அதற்குமேல் இரும்புவேல் பொருத்தப்பட்டிருக்கும். அந்தப் பூக்களைவிட அதன் பேக் ட்ராப்பில் அந்தக் கல்லூரியில் பயிலும் இளம்படையினரை பார்த்ததுதான் பலருக்கும் மனதுக்குள் நினைவுகளாய்.
அந்தக் கல்லூரியின் இருபுறங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தங்கள், கல்லூரிக்கு வந்துசெல்பவர்கள், நகருக்குச் செல்பவர்கள் என எப்போதுமே மனிதர்களால் நிறைந்திருக்கும். நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் அந்தக் கூட்டத்தைக் கடந்து செல்வது பலருக்கும் அலாதியான உணர்வைத் தந்திருக்கும். அதுவும் இருட்டியும் விடாது, சூரியனும் மறைந்திருக்காது அப்படியான ஒரு நேரத்தில்தான் கல்லூரி முடியும். அந்தத் தருணத்துக்காகவே, அந்தக் கல்லூரியின் இருபுற சாலைகளிலும் உள்ள கடைகளின் முன்பும், ஓரங்களிலும் நூற்றுக்கணக்கான கண்கள் காத்துக்கிடக்கும்.
அதுவும் அங்கிருந்த டீக்கடைதான், இளசுகள் டாப் அடிக்கும் மெயின் ஸ்பாட். கல்லூரி முடிந்து யாவரும் கடக்க கடக்க, டீக்கடையின் கூட்டமும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். அந்த டீக்கடைக்குச் செல்லும்போதெல்லாம் காணக் கிடைக்கும் காட்சிதான். அந்த நேரத்தில் கோடை பண்பலையில், ஒரு அரை மணி நேரத்துக்கு இளையராஜாவின் பாடல்தான். இந்த மாதிரியான ஒரு சூழலில்தான் அந்தக் டீக்கடையில், இந்தப் பாடலைக் நானும் கேட்டேன். டீக்கடையில் இருப்பவர்களும், வீடு திரும்புவோரும் கண்களில் பரிமாறிக் கொள்ளும் அழகிய கொஞ்சல்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
1990-ம் ஆண்டு வெளிவந்த ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’ திரைப்படத்தில் வரும் 'சொர்க்கத்தின் வாசற்படி' பாடல். இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். பாடலை ஜேசுதாஸ் உடன் இணைந்து சித்ரா பாடியிருப்பார். குறிப்பாக, இந்தப் பாடல் வரும்போதெல்லாம், அந்த இளசுக முகத்தில் ஒரு மெல்லியப் புன்னகை சிதறும். இருவேறு பாலினங்களின் இறுக்கத்தை தளர்த்தி முகத்தில் புன்னைகையைப் பூக்க வைக்கும் அளவுக்கு அந்தப் பாடல் வரியில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வம் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தை அதிகரித்தது.
அந்தப் பாடல் கிளாசிக் சாக்ஸபோன் ஓப்பனிங் உடன் மிக மிருதுவாகவே தொடங்குகிறது. அங்கிருந்து டாப் நோட்டை எட்டும்போது, புதுவெள்ளமென பீறிட்டு எழும்பும் வயலினகளை, மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி நயமாக்குகிறது அந்த கிடார் இசை. வயலின்களும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வசீகரிக்க, பூமழை சாரலாய் அதன் மேல் விழும் கீபோர்டின் இசை நம்மை பாடல் கேட்பதற்கு ஆயத்தப்படுத்தி விடுகிறது. இசை கந்தர்வன் ஜேசுதாஸ் குரலில் தொடங்கும் பாடலில், இனிதாக சேர்கிறது சித்ராவின் குரல். இந்த இசைக் கருவிகளின் வார்ப்பில்தான் அந்த மெல்லிய புன்னகை ஆயத்தமாகிறது. அதுவும் ஜேசுதாஸின் குரலில் "பெண்ணல்ல நீ எனக்கு வண்ண களஞ்சியமே" என பாடும்போது, மெல்லிய புன்னகை பிறக்கிறது.
அதன்பின் வரும் முதல் இடையிசையிலும் அப்படித்தான், சாக்ஸபோன், கிடார், வயலின், கீபோர்ட் கூட்டணியுடன் டிரம்ஸ் சேர்ந்து கொள்ள யார்தான் மயங்காமல் இருப்பார்கள். டீக்கடை இளசுகளில் பலர் காத்திருப்பது, இந்த முதல் இடையிசை முடிந்து வரும் வரிக்ககாத்தான் என்பது பல நாட்களாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. ராஜாவின் இந்த முதல் இடையிசை ஜாலங்கள் முடிந்த கணத்தில், "உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே" வரும் வரிகளைத்தான், அந்த இளசுகளின் அத்தனை உதடுகளும் மெய்மறந்து உச்சரித்து மெச்சிக் கொள்ளும்.
இந்தப் பாடலில் பல்லவி மற்றும் சரணங்கள் தபேலா பின்னிசையாக சேர்க்கப்பட்டிருக்கும். முதல் மற்றும் இரண்டாம் இடையிசையில் டிரம்ஸை பயன்படுத்தி ரசவாதம் செய்திருப்பார் இளையராஜா. அதைவிட, சொர்க்கத்தின் வாசற்படி என்று பாடும்போது கிடாரில் ஒரு சிறிய பிட்டும், எண்ணக் கனவுகளில் என வரும்போது புல்லாங்குழலில் ஒரு சிறிய பிட்டும் இசைக்கப்பட்டிருக்கும். இனிப்பின் மீது தேனை சேர்த்ததற்கு சமமான இசை கற்பனை அது. அந்த துண்டு இசையே போதும் எத்தனை முறை திரும்பக் கேட்டாலும் திகட்டவேச் செய்யாது. அப்படியிருக்கும்.
பாடலின் இரண்டாவது இசையில் கிடாரும், வயலின்களும்தான் ஆதிக்கம் செலுத்தியிருக்கும். பாடலை ஜேசுதாஸும் சித்ராவும் அத்தனை லாவகமாக பாடி பாடல் கேட்பவர்களின் உள்ளங்களை பாடல் வெளிவந்த காலத்திலும் சரி இப்போதும் சரி, கொள்ளயடித்துக் கொண்டே இருக்கின்றனர். பாடல் வரிகளும் காதலின் அழகியலையும், இணக்கத்தையும் அத்தனை அழகாக வார்த்திருப்பார் காவியக் கவிஞர் வாலி. தினந்தோறும் பாடல் கேட்கும் பழக்கம் கொண்ட எத்தனையோ இளையராஜா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடல்களின் பட்டியலில் இந்தப் பாடலுக்கு எப்போதும் ஒரு தனியிடம் என்றென்றும் இருக்கவேச் செய்யும். தனது இசையால், வாழும்போதே சொர்க்கத்தை உணரச் செய்யும் ராகதேவனின் தேவகானங்கள் நாளும் நீளும்...
சொர்க்கத்தின் வாசற்படி பாடல் இணைப்பு இங்கே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT