Published : 14 Aug 2023 05:10 PM
Last Updated : 14 Aug 2023 05:10 PM

பட்டியலின மக்களை தவறாகப் பேசிய கன்னட நடிகர் உபேந்திரா மீது வழக்குப் பதிவு

பெங்களூருவில் உபேந்திராவுக்கு எதிரான போராட்டம். | படம்: முரளி குமார்

பெங்களூரூ: பட்டியலினத்தவரை தவறாகப் பேசிய விவகாரத்தில் கன்னட நடிகர் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஃபேஸ்புக் லைவில் தனது உத்தம பிரஜாகிய கட்சி குறித்து பேசிய உபேந்திரா, “அப்பாவி இதயங்களால் மட்டுமே மாற்றங்கள் நிகழும். அதுபோன்ற இதயமுடையவர்கள் எங்களுடன் இணைந்து பேச வேண்டும் என விரும்புகிறேன். அவர்களின் பரிந்துரைகள் எங்களுக்கு கைகொடுக்கும். அவர்கள் ஒருபோதும் கவனக்குறைவாகவோ, மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையிலோ பேசமாட்டார்கள்.

சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. தன் மனதில் தோன்றுவதையெல்லாம் பேசிவிடுகிறார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு நகரம் என எடுத்துக்கொண்டால் அதில் தலித் மக்கள் இருப்பதை போல, இதுபோன்ற ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை புறக்கணித்துவிடுங்கள். அவர்களின் கருத்துகளை காதில் வாங்கிகொள்ளாதீர்கள். மக்களை நேசிப்பதே தேசபக்தி” என சர்ச்சையான வகையில் பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து கர்நாடகாவின் ராமநகர் பகுதிகளில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் உபேந்திராவின் போஸ்டர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து உபேந்திரா மேற்கண்ட சர்ச்சை வீடியோவை டெலிட் செய்துவிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் லைவில் நான் தவறாக ஒன்றை பேசிவிட்டேன். இது ஒரு குறிப்பிட்ட மக்களை காயப்படுத்தும் என அறிந்ததும் அதனை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கிவிட்டேன். என்னுடைய கருத்துக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைப் பேச்சு எதிரொலியாக பெங்களூருவின் சென்னம்மானா கேர் அச்சுகட்டு (Chennammana Kere Achukattu) காவல் நிலையத்தில் உபேந்திராவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x