Last Updated : 07 Aug, 2023 02:30 PM

1  

Published : 07 Aug 2023 02:30 PM
Last Updated : 07 Aug 2023 02:30 PM

‘ஜெயிலர்’ பார்க்க பெங்களூருவுக்கு ரஜினி ரசிகர்கள் படையெடுப்பு: அதிகாலை காட்சி டிக்கெட்டுக்கு ரூ.5,000 வரை ‘வசூல்’

பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை பார்ப்பதற்காக தமிழகத்தில் இருந்து ரசிகர்கள் பெங்களூருக்கு வருவதால் டிக்கெட் விலை பன்மடங்கு அதிகரித்துள்ள‌து.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் அதிகாலை காட்சிகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, காலை 9 மணிக்குப் பிறகே தமிழக திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அங்கு பெரும்பாலான திரையரங்குகளில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதாக அதிகாரபூர்வமாக‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பெங்களூருவில் முகுந்தா, பாலாஜி, பூர்ணிமா உள்ளிட்ட தனி திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு நாளில் 730 காட்சிகள்: பெங்களூருவை பொறுத்தவரை தமிழில் 720 காட்சிகளும், கன்னடத்தில் 2 காட்சிகளும், தெலுங்கில் 8 காட்சிகளும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலையில் தொடங்கியது. முதல் நாளிலே ஆயிரக்கணக்கானோர் திரையரங்கு வாசலில் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கினர். சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து டிக்கெட் வாங்கினர். இதனால் ஆகஸ்ட் 10ம் தேதிக்கான முதல் காட்சிக்கான டிக்கெட் 90 சதவீதத்துக்கும் அதிகமாக விற்று தீர்ந்தன.

பெங்களூருவில் தனி திரையரங்குகளில் ஒரு டிக்கெட் ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்ய‌ப்பட்டது. பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.600 முதல் ரூ.2200 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே, சில தரகர்கள் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, கள்ளச் சந்தையில் ரூ.5,000-க்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

நடவடிக்கை தேவை: இதுகுறித்து பெங்களூரு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் கூறுகையில், ''தமிழகத்தில் அதிகாலைக் காட்சி வெளியாகாததால் நிறைய ரசிகர்கள் பெங்களூரு வந்து காண இருக்கின்றனர். அதனால், தங்களின் நண்பர்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

மற்ற‌ படங்களுக்கு தனி திரையரங்குகளில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட், ‘ஜெயிலர்’ படத்துக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. மல்டிபிளக்ஸ்களில் ரூ.225-க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.600 முதல் ரூ.2200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ரஜினியின் ரசிகர்கள் தமிழகத்தில் இருந்து வருவதை தெரிந்துக்கொண்டு சில திரையரங்கங்கள் அதிகாலை 4 மணி காட்சிக்கான டிக்கெட்டை ரூ.5,000 வரை விற்று வருகின்றன. இந்தக் கட்டண கொள்ளையை நடிகர் ரஜினிகாந்த் தடுக்க வேண்டும். குறிப்பாக, படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும், கர்நாடக அரசும் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x