“சில மாற்றுக் கருத்து இருந்தாலும்...” - ‘மாமன்னன்’ படத்துக்கு லஷ்மி ராமகிருஷ்ணன் பாராட்டு
சென்னை: “படத்தில் காட்டப்பட்டிருக்கும் வன்முறை காட்சிகள் சிலவற்றில் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், மற்ற காட்சிகள் அதனை மறக்க வைக்கிறது. சில காட்சிகள் என் இதய துடிப்பை நிறுத்திவிட்டன” என ‘மாமன்னன்’ படத்தை இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் படம் பார்த்தேன். மாரி செல்வராஜின் மற்றொரு சிறந்த படைப்பு. படத்தில் காட்டப்பட்டிருக்கும் வன்முறை காட்சிகள் சிலவற்றில் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், மற்ற காட்சிகள் அதனை மறக்க வைக்கிறது. சில காட்சிகள் என் இதய துடிப்பை நிறுத்திவிட்டன. உதயநிதி ஸ்டாலின் இதுவரை இல்லாத வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என தோன்றுகிறது. வில்லனின் மனைவி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மாரிசெல்வராஜ் தான் சொல்ல நினைத்ததை மிகுந்த அக்கறையுடன் தெளிவாக சொல்லியிருப்பதாக உணர்கிறேன்” என பாராட்டியுள்ளார். அவரின் பாராட்டுக்கு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
