சத்யராஜின் ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சத்யராஜின் ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

சென்னை: சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜாக்சன் துரை’. இதை பி.வி.தரணிதரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் ஐ ட்ரீம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில், சத்யராஜ், சிபிராஜுடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். 1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வர, அக்காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் போல செட் அமைத்து படமாக்கவுள்ளனர்.

இந்த நிலையில், ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா அல்லது வேறு கதைக்களமா என்பது குறித்து படக்குழு தெரிவிக்கவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in