Published : 31 Jul 2023 05:06 PM
Last Updated : 31 Jul 2023 05:06 PM

‘மாமன்னன்’ ஃபஹத் ஃபாசில் காட்சிகளுக்கு வகை வகையான பாடல் ‘வெர்ஷன்கள்’ - நெட்டிசன்களின் பார்வை என்ன?

‘மாமன்னன்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள பகுதிகள் மட்டும் தனியாக கட் செய்யப்பட்டு பல்வேறு பாடல்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்யப்பட்டு ‘மிக்ஸ்’ வீடியோக்களாக இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளை விட ஓடிடியில் படம் வெளியான பிறகு அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏராளமான சினிமா பிரியர்கள் படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் குறித்த விமர்சனங்களை இணையத்தில் எழுத ஆரம்பித்தனர்.

இந்தச் சூழலில், திடீரென சமூக வலைதளங்களில் ஃபஹத் ஃபாசில் வீடியோவும் வைரலாக தொடங்கியது. அதாவது ‘மாமன்னன்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள பகுதிகள் மட்டும் தனியாக கட் செய்யப்பட்டு, அதில் ‘சாதி’யத்தை பெருமைப்படுத்தும் பாடல்கள் இணைக்கப்பட்டன. மறுபுறம் ‘தாமிரபரணி’ படத்தின் ‘கட்டபொம்மன் ஊர் எனக்கு கெட்டவன்னு பேர் எனக்கு’ போன்ற பாடல்களுடன் எடிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்படியே மாற்றாக ஒருபுறம், ‘கபாலி’ படத்தின் ‘மேட்டுக்குடியின் கூப்பாடு நாட்டுக்குள்ள கேட்காது’ என பல வெர்ஷன்களில் ஃபஹத் வீடியோ எடிட் செய்யபட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மாமன்னன்’ படத்தை பொறுத்தவரை ஃபஹத் ஃபாசில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் என்பது சாதியப் பெருமை அடங்கிய கவுரத்தை அடைகாக்கும் வில்லன் கதாபாத்திரம். ஆனால், இத்தகைய எதிர்மறை கதாபாத்திரத்தை ‘ஹீரோ’வாக சித்தரிக்கும் போக்கு இந்தப் பாடல்களின் மூலம் வெளிப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்களை சிலர் ஜாலியாக அணுகினாலும், பலர் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எழுதி வருகின்றனர். அப்படியான நெட்டிசன்களின் தொகுப்பைக் காணலாம்.

திரைப்படத் திறனாய்வாளர் சுரேஷ் கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “சிறந்த வில்லன் கதாபாத்திரத்துக்காக உழைத்த ஃபஹத் பாசிலை ஹீரோவாக்கி உல்டாவாக்கிவிட்டனர்” என பதிவிட்டுள்ளார்.

அருள் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மாமன்னன் திரைப்படத்தில் இருந்து தப்பான விடயத்தை இளம்தலைமுறையினர் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது வேதனைக்குரியது” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிஷா, “பகத் பாஸில் மாமன்னன் மிக்ஸ் வீடியோக்களில் வெளிப்படுவது சாதிய வன்மம் அன்றி வேறில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், “ஃபஹத் கதாபாத்திரம் சிறப்பான வடிவமைப்பு. ஆனால், அதை மக்கள் எப்படி தங்களுடன் பொருத்திகொள்கிறார்கள் என புரியவில்லை” என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “இது ஒரு அக மகிழ்வின் வெளிப்பாடு” எனப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மோகன்.ஜி. தனது ட்விட்டர் பதிவில், “அநியாயம் பண்ணுறீங்க... போதும் நிறுத்துங்க” என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு தனது ட்விட்டர் பதிவில், “சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x