Published : 28 Jul 2023 03:11 PM
Last Updated : 28 Jul 2023 03:11 PM
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் தயாரிப்பு என்று விளம்பரம் செய்யப்பட்டு பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘எல்ஜிஎம்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
உயர் நடுத்தர வர்க்க ஐடி இளைஞர் கவுதம் (ஹரீஷ் கல்யாண்). சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், தனது தாய் லீலாவின் (நதியா) அரவணைப்பில் வளர்கிறார். தன்னோட பணிபுரியும் மீராவிடம் (இவானா) தனது இரண்டு ஆண்டு காதலைச் சொல்லி அவரது வீட்டுக்கு தன் தாயுடன் பெண் கேட்டுச் செல்கிறார். பெண் பார்க்கும் நிகழ்வின்போது நடக்கும் உரையாடலின்போது திருமணத்துக்குப் பின் தன்னால் கூட்டு குடும்பமாக வாழ இயலாது என்று கூறி திடீரென திருமணத்தை நிறுத்துகிறார் நாயகி. பின்னர் சிறிய மனமாற்றத்துக்குப் பிறகு தன் வருங்கால மாமியாருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் அதற்கு பழகிப் பார்க்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு ஒரூ டூர் ஏற்பாடு செய்கிறார் நாயகி. சில பல பொய்களை சொல்லி தன் தாயை சுற்றுலா வருவதற்கு சம்மதிக்க வைக்கிறார் நாயகன். நாயகிக்கும், நாயகனின் அம்மாவுக்கு இடையே மன ஒற்றுமை ஏற்பட்டதா, இறுதியில் நாயகனின் காதல் வென்றதா என்பதே ‘எல்ஜிஎம்’ படம் சொல்லும் கதை.
இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதற்கு ஒரே காரணம் தோனி. தன் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு கைமாறாக தனது முதல் தயாரிப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை தயாரித்ததாக தோனி கூறியிருந்தார். இப்படத்தை பெரியளவில் விளம்பரமும் செய்தார். ஆனால் அந்த எதிர்ப்பார்ப்புக்கான நியாயத்தை இப்படம் செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
படம் தொடங்கியதுமே தேவையற்ற காட்சிகள் எதுவுமின்றி, பெண் பார்க்கச் செல்வது, நாயகியின் கண்டிஷன், குடும்பத்தோடு கூர்க் ட்ரிப் போவது என ஓரளவு சுவாரஸ்யமாகவே படம் சென்றது. மிர்ச்சி விஜய்யின் பெரும்பாலான டைமிங் ஒன்லைனர்கள் ரசிக்க வைத்தன. முதல் பாதியின் பெரும்பாலான பகுதி பஸ்சில்யே நடப்பது போல இருந்தாலும், யோகி பாபு, ‘விக்கல்ஸ்’ யூடியூப் டீம், வினோதினியின் குடும்பம் என கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றன. நதியா - இவானா இருவரையும் சுற்றித்தான் நகரப் போகிறது என்பதால் அதற்கான காட்சியமைப்புகளும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தன.
ஆனால், இடைவேளைக்குப் பிறகு வேறொரு படத்துக்கு வந்துவிட்டோமா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு தறிகெட்டு திரிகிறது திரைக்கதை. மாமியார் - மருமகள் இருவரும் சமாதானம் ஆகி கோவா செல்வது, அங்கிருந்து திரும்ப கூர்க், வெள்ளைக்கார சாமியார் ஆசிரமம், வேட்டைக்காரர்களிடம் சிக்குவது என ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த கதை, தொடர்புகள் எதுவுமின்றி எங்கெங்கோ சென்று முட்டி மோதுகிறது.
அதுவும் கோவாவில் தாயையும் காதலியையும் ஹரீஷ் கல்யாணும் மிர்ச்சி விஜய்யும் தேடுவதாக வரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. முதல் பாதியில் ப்ளஸ்ஸாக இருந்த விஷயங்களே பிற்பாதியில் படத்துக்கு பெரும் பிரச்சினையாகி விட்டதுதான் சோகம். முதல் பாதியில் கைகொடுத்த மிர்ச்சி விஜய், யோகி பாபு காமெடி இரண்டாம் பாதியில் எரிச்சலை கிளப்புகின்றன. படத்தை தொடங்கிவிட்டோமே என்று இஷ்டத்துக்கு காட்சிகளைப் போட்டு இரண்டாம் பாதியை நிரப்பியது போன்றிருக்கிறது.
நடிகர்களின் நடிப்பில் குறையேதும் இல்லை. ஹரீஷ் கல்யாண், நதியா, இவானா, சில காட்சிகளே வரும் விக்கல்ஸ் குழு, வினோதினி வைத்தியநாதன் குடும்பம் என அனைவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாகவே செய்திருக்கின்றனர். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியே இப்படத்துக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பாடல்களோ, பின்னணி இசையோ எதுவும் ஒட்டவில்லை.
ஒரு பெண் வருங்காலத்தில் ஒரே வீட்டில் வசிக்கப் போகும் தனது வருங்கால மாமியாருடன் பழகிப் பார்க்க வேண்டும் என்று யோசித்த வரை சரிதான். ஆனால் அதற்கேற்ற நியாயங்களோ, எமோஷனலான காட்சியமைப்புகளோ எதுவும் இன்றி பப்புக்கு செல்வது, குடித்துவிட்டு ஆட்டம் போடுவது, ஆள் அரவமற்ற சாலையில் கார் ரிப்பேர் ஆகி மாட்டிக் கொள்வது என மிகவும் மேம்போக்காக அணுகியுள்ளார் இயக்குநர். இதில் கிளைமாக்ஸில் கொடூரமான கிராபிக்ஸில் புலியை வைத்து காமெடி செய்திருப்பதெல்லாம் எரிச்சலின் உச்சகட்டம்.
முதல் பாதியில் இருந்த ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதையை இரண்டாம் பாதியிலும் தக்கவைத்து, லாஜிக்கே இல்லாத ஜல்லியடிப்புகளை கத்தரித்திருந்தால் ஒருமுறையேனும் பார்க்கக் கூடிய படமாக வந்திருக்கும் இந்த ‘எல்ஜிஎம்’. பெரும் எதிர்பார்ப்புடன் தோனியின் முதல் தயாரிப்பு சிக்ஸர் அடிக்காமல் பரிதாபமாக டக் அவுட் ஆகி நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT