Published : 21 Jul 2023 09:51 PM
Last Updated : 21 Jul 2023 09:51 PM

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரை பயன்படுத்தி மோசடி: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மணிகண்டன் என்ற நபர் பணத்தை மோசடி செய்து வருவதாக அந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் அர்ஜூனர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அதில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கூகுள் பே மூலமாக பணத்தை அனுப்ப வேண்டுமென மணிகண்டன் என்பவர் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியில் சிக்கி ஆகாஷ் என்ற நபர் 42 ஆயிரம் ரூபாய் ஏமாந்து இருப்பதாகவும், பின்னர் அவர் பட நிறுவனத்தில் வந்து கேட்டப்போது தான் தங்களுக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில், எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டையும் நாங்கள் நியமிக்கவில்லை. இது தொடர்பான செய்திகள் வந்தால் நம்ப வேண்டாம்.மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x