Published : 21 Jul 2023 11:23 AM
Last Updated : 21 Jul 2023 11:23 AM
உலக வரலாற்றில் மனிதகுலத்துக்கு மனிதனே ஏற்படுத்திய பேரழிவுகளை வரிசைப்படுத்தினால் அதில் ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய சம்பவம் முன்னிலை வகிக்கும். சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களைக் குடித்த அந்தக் கொடூரம் மனிதகுலத்துக்கு மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்திய துர்நிகழ்வுகளில் ஒன்று. உலக நாடுகளின் வரலாற்றையே மாற்றி எழுதிய இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஜே.ஒப்பன்ஹைய்மரின் வாழ்க்கைப் பின்னணியில் கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ள வரலாற்று ஆவணம்தான் இந்த ‘ஓப்பன்ஹைய்மர்’ திரைப்படம்.
ஓப்பன்ஹைமர் (சிலியன் மர்ஃபி) ரஷ்ய கம்யூனிஸ்ட்களுக்கு உதவினாரா என்ற விசாரணையின் பின்னணியில்தான் முழுப் படமும் சொல்லப்படுகிறது. 1920-களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தனது மேற்படிப்பை தொடரும் இளம் வயது ஓப்பன்ஹைமர் நமக்கு காட்டப்படுகிறார். தொடர்ந்து கம்யூனிஸ்ட்களுடனான அவரது நட்பு, ஜீன் டேட்லாக் (ஃப்ளோரன்ஸ் பக்) உடனாக காதல், ஹிட்லரின் நாஜிப் படையினருக்கு எதிரான போரில் ஒப்பன்ஹைமரின் பங்கு என அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன.
சொந்த நாடு திரும்பும் அவர், அமெரிக்க அரசின் ‘புராஜெக்ட் மன்ஹாட்டான்’ என்ற ஒரு திட்டத்துக்குள் கொண்டுவரப்படுகிறார். இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன? அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்த எந்த பிரக்ஞையும் அவருக்கு இல்லை. இந்த திட்டத்துக்காக அமெரிக்காவின் லாஸ் அலமாஸ் என்ற செவ்விந்தியர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனி நகரமே உருவாக்கப்படுகிறது. அங்குதான் உலகையே புரட்டிப் போடும் அந்தக் கண்டுபிடிப்பை தனது சகாக்களுடன் நிகழ்த்துகிறார். சுயநலம் கொண்ட ஒரு மனிதனின் ஈகோவால் பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறார். தன் மீதான புகார்களை ஒப்பன்ஹைமர் உதறித் தள்ளினாரா என்பதை ஒரு சிறிய ட்விஸ்ட் உடனும் நிறைய்ய்ய்ய வசனங்களுடன் சொல்லியிருக்கிறார் நோலன்.
படத்தின் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் ஒரு காட்சி. ஹிரோஷிமா - நாகசாகி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த ஹாரி ட்ரூமேன், ஒப்பன்ஹைமரை நேரில் பாராட்ட அழைக்கிறார். வெள்ளை மாளிகைக்குச் செல்லும் ஒப்பன்ஹைமர் அதிபரின் முகத்துக்கு நேரே, ‘மிஸ்டர் ப்ரெசிடென்ட், என் கைகளில் ரத்தக் கறை படிந்திருப்பதைப் போல உணர்கிறேன்’ என்று சொல்கிறார். இதுதான் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தின் அடிநாதம். இது வெறுமனே அணுகுண்டு வெடிப்பை 70MM திரையில் பிரம்மாண்டமாக காட்டும் ஒரு திரைப்படமல்ல. அரசியல் சுழலில் அலைகழிக்கப்பட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை. ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஒருவன், தனி மனிதனின் ஈகோவால் ஜீரோவாக கீழிறக்கப்படும் கதை.
ஓப்பன்ஹைமராக வாழ்ந்திருக்கும் சிலியன் மர்ஃபிக்கு இது வாழ்நாளுக்கான படம். இதுவரை வந்த நோலன் படங்களில் எந்தவொரு நடிகரும் (சிலியன் மர்ஃபி உட்பட) வழங்காத ஒரு அற்புதமான நடிப்பை இதில் வழங்கியுள்ளார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை. அடுத்தபடியாக லெவிஸ் ஸ்ட்ராஸ் ஆக நடித்திருக்கும் ராபர்ட் டவுனி ஜூனியர். அயர்ன்மேனாக உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தவர், அதன் பின் சொல்லிக் கொள்ளும்படியாக எதிலும் ஈர்க்கவில்லை. அந்த குறையை ‘ஓப்பன்ஹைமர்’ தீர்த்து வைத்திருக்கிறது. மேட் டேமன், ஃப்ளோரென்ஸ் பக், எமிலி ப்ளண்ட், ஜோஷ் ஹார்ட்நெட்ம் கேஸி அஃப்ளிக், கேரி ஓல்ட்மேன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சில காட்சிகளில் வந்தாலும் ரெமி மலெக் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
ஓப்பன்ஹைமரின் கற்பனையில் ஓடும் குவான்டம் இயற்பியலில் அதிர்வலைகள், ஒவ்வொரு முறை ஓப்பன்ஹைமர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும்போது பின்னணியில் ஏற்படும் அணுகுண்டின் கதிர்வீச்சு, அவர் தடுமாறும்போது சுற்றி இருப்பவை அதிர்வது, நான் லீனியர் முறை கதை சொல்லல் என ஆங்காங்கே நோலன் டச் தெரிந்தாலும், இது வழக்கமான நோலன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். இன்னும் சொல்லவேண்டுமென்றால் இப்படம் நோலன் ரசிகர்களுக்கே பிடிக்குமா என்பது சந்தேகமே. நோலன் படங்களில் வழக்கமாக இடம்பெறும் மூளைக்கு வேலை கொடுக்கும் திரைக்கதையோ, ‘பகீர்’ ரக ட்விஸ்ட்களோ, புல்லரிக்கச் செய்யும் பின்னணி இசையோ இதில் இருக்காது. அப்படி வைப்பதற்கான இடமிருந்து, அவை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அறிவியலைத் தாண்டி அரசியலையும், மனித உணர்வுகளையும் இப்படம் அதிகம் பேசுகிறது. இதுவரை நோலன் இயக்கிய படங்கள் எதுவும் இந்த அளவுக்கு துணிச்சலுடன் அரசியலை பேசியதில்லை.
படத்தின் மிகப் பெரிய பிரச்சினை நீ....ண்ட நெடிய வசனங்கள் தான். பொழுதுபோக்கு அம்சங்களுக்காக படம் பார்க்க வரும் சராசரி ரசிகனை இப்படம் திருப்திபடுத்துவது கடினம். ராபர்ட் ஓப்பன்ஹைமரின் பின்னணி குறித்து கொஞ்சமேனும் தெரிந்துகொண்டு படம் பார்க்கச் செல்வது நலம். 3 மணி நேரங்களுக்கு மேலாக ஓடக் கூடிய படத்தில் ஏராளமான நெடிய காட்சிகள் கொஞ்சம் அல்ல, ரொம்பவே பொறுமையை பலருக்கும் சோதிக்கலாம். அதேபோல படத்தின் தொடக்கத்தில் வரும் ஆழமான அறிவியல் வசனங்களையும், ஏராளமான கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
நோலனின் முந்தைய படங்களான ‘மெமென்டோ’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டெர்ஸ்டெல்லார்’ அனைத்திலும் கூட ஆழ்ந்த அறிவியல் தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றை எளிய ரசிகர்களும் புரிந்துகொள்ள இயலும். கடைசியாக வெளிவந்த, சிக்கலான காட்சியமைப்புகளைக் கொண்ட ‘டெனெட்’ படம் கூட புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது. அப்படியான எந்தவித சிக்கல்களும் இல்லாத திரைக்கதையைக் கொண்ட ‘ஓப்பன்ஹைமர்’ படத்தில் வசனங்களையும், கதாபாத்திரங்களையும் பின்தொடர்வதே சற்றே கடினமாக இருக்கிறது.
'இப்போது நான் உலகத்தை அழிக்கும் மரணமாக ஆகிவிட்டேன்’ என்ற கீதையின் மேற்கோள், ஐன்ஸ்டீனுக்கும் ஓப்பன்ஹைமருக்கும் இடையிலான நட்பு, அதனை படத்தில் காட்டிய விதம் சிறப்பு. லுட்விக் கோரன்ஸனின் பின்னணி இசை படத்துக்கும் பெரும் பலம். படப்பிடிப்பு தொடங்கியது முதலே பெரும் பில்டப் கொடுக்கப்பட்ட அந்த ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு காட்சிக்கான முக்கியத்துவத்தை குறைத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். காரணம், படத்தின் ஆரம்பம் முதலே அதை நோக்கித்தான் காட்சிகள் நகர்கின்றன. அந்தக் காட்சியை எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியில் படமே முடிந்து விடுகிறது. எனினும், அணுகுண்டு சோதனையை காட்சியப்படுத்திய விதம் பிரம்மாண்டம்.
மனிதகுலத்தின் கரங்களில் இன்று வரை படிந்திருக்கும் ரத்தக் கறைக்கு காரணமான ஒரு பேரழிவின் சாட்சியாய் இப்படம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு ஒரு வரலாற்று ஆவணமாக நிலைத்திருக்கும். எனினும், உலக சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சராசரி உள்ளூர் ரசிகனையும் கவரும் வகையில் கத்திரி போட்டு காட்சிகளை கூர்தீட்டியிருந்தாலும் அனைத்து தரப்பாலும் கொண்டாடப்படும் படமாக மாறியிருக்கும் இந்த ‘ஓப்பன்ஹைமர்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT