Last Updated : 14 Jul, 2023 07:34 PM

 

Published : 14 Jul 2023 07:34 PM
Last Updated : 14 Jul 2023 07:34 PM

கவிதை எழுதிய சிறுவன் ‘அணுகுண்டு’ உருவாக்கிய கதை... - யார் இந்த ஓப்பன்ஹைமர்?

ராபர்ட் ஓப்பன்ஹைமர் (இடது)

கிறிஸ்டோபர் நோலனின் ’ஓப்பன்ஹைமர்’சினிமா ரசிகர்களிடத்தில் அப்படம் குறித்த அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நோலனின் டார்க் நைட், இன்செப்ஷன், மெமென்டோ, இன்டர்‌ஸ்டெலர் போன்ற முந்தைய படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் அறிவியல் பூர்வமாகவும் , சித்தாந்த ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியவை. இந்த வரிசையில் ஓப்பன்ஹைமரும் இணையும் என்பதே அவரது அபிமானிகளின் முன்தீர்மானமாக உள்ளது. இவற்றை தவிர்த்து ஓப்பன்ஹைபர் மூலமாக நோலன் சொல்லி இருக்கும் திரைக்கதைக்காகவும் பலரும் காத்திருக்கின்றனர். அப்படி என்ன ஓப்பன்ஹைமரில் இருக்கிறது...

’ஓப்பன்ஹைமர்’ - இப்பெயரே இத்திரைப்படத்துக்கான ஆவலை பலரிடத்தில் ஏற்பட காரணமாகியிருக்கிறது. அணுகுண்டின் தந்தை என அறியப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமர் போரின் போக்கை எப்படி தனது புத்திசாலித்தனத்தின் மூலம் மாற்றினார். அவரின் கண்டுபிடிப்பு ஓர் பெரும் அழிவுக்கு அடித்தளம் போட்டது என்பதை ஓப்பன்ஹைமர் பேச இருக்கிறது. கெய் பெர்ட் & மார்ட்டின் ஜே. ஷெர்வின் எழுதிய "American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer" என்ற புத்தகத்தின் அடிப்படையில்தான் இந்தப் படத்தை நோலன் திரைப்படமாக எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

யார் இந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர்? - அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1904-ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக வந்த செல்வந்தரான ஜவுளி இறக்குமதியாளர், ஜூலியஸ் ஓப்பன்ஹைமர் - ஓவியர் எல்லா ஃப்ரீட்மேன் ஓப்பன்ஹைமர் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் ராபர்ட் ஓப்பன்ஹைமர். சிறுவயதில் இருந்தே கனிமங்களை பற்றி படிப்பதில் ஓப்பன்ஹைமருக்கு ஆர்வம் இருந்தது. கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், ஓப்பன்ஹைமர் கவிதைகளை எழுதுவதில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இயற்பியலை கற்று அறிவதற்கு முன்னர் அவர் லத்தீன், கிரேக்கம் மற்றும் கிழக்குத் தத்துவங்களைப் படித்தார், பின்னரே அவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க திரும்பிய ஓப்பன்ஹைமர், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இயற்பியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றினார். அங்குதான் அவர் முதல் முதலாக கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்கள் குறித்த தனது ஆய்வுகளை நடத்தினார்.அதேவேளையில் இயற்பியலாளரும், நோபல் பரிசு வென்றவருமான எர்னஸ்ட் லாரன்ஸுடன் இணைந்து இயற்பியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்தார். தனது ஆராய்ச்சிகளுக்கு இடையே 1940-ல் கேத்ரின் என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பீட்டர் & டோனி என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.

ஓப்பன்ஹைமரும் - மன்ஹாட்டனும்: இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கையில் முதலில் அணுகுண்டை எந்த நாடு தயாரிக்கிறது என்ற போட்டி கடுமையாக நிலவியது. இப்போட்டியில் முன்னிலையில் இருந்த அமெரிக்காவுக்கு அப்போது பிரிட்டன் & கனடா ஆகிய நாடுகள் உறுதுணையாக இருந்தன. உலகின் முதல் அணு குண்டை தயாரிக்கும் மன்ஹாட்டன் திட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

குடும்பம், பிள்ளைகள், இயற்பியல் ஆராய்ச்சி என்று பயணித்துக் கொண்டிருந்த ஓப்பன் வாழ்வில் மன்ஹாட்டன் நுழைந்தது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் இருந்த லாஸ் அலாமோஸ் ஆராய்ச்சி கூடத்தில் உலகின் முதல் அணு குண்டு தயாரிப்பிற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதற்கு தலைமை தாங்க ஓப்பன்ஹைமர் 1942 ஆம் ஆண்டு அழைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளுடன் இணைந்து இரவு - பகல் பார்க்காமல் உலகின் முதல் அணுகுண்டை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் ஓப்பன்ஹைமர்.

16 ஜூலை 1945 அதிகாலை நேரம், ராபர்ட் ஓப்பன்ஹைமர் உலகை மாற்றும் ஒரு கணத்திற்காக ஒரு கட்டுப்பாட்டு பதுங்கு குழியில் காத்திருந்தார். சுமார் 10 கிமீ தொலைவில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தின் வெளிர் மணலில் "டிரினிட்டி" என்ற குறியீட்டுப் பெயரில் உலகின் முதல் அணுகுண்டு சோதனை வெறிக்கரமாக நடத்தப்பட்டது. அனுகுண்டு வெடித்தபோது சூரியனை வீஞ்சக் கூடிய வெப்பம் உணரப்பட்டது. சுமார் 160 கீ.மீ வரை அணு குண்டு வெடிப்பின் சத்தம் உணரப்பட்டது. வரலாற்று புகைப்படமாக பின்னாளில் மாறிபோன காளாண் வெண்புகை படலம் அப்போதுதான் உருவானது..

இதன் முடிவில் உலகை அசைத்து பார்க்கும் திறன் கொண்ட உலகின் முதல் அணுகுண்டை ஓப்பன்ஹைமர் தலைமையிலான குழு உருவாக்கியது. முதல் அணுகுண்டை தயாரிக்கும் இந்த மன்ஹாட்டன் திட்டம் குறித்து 1942 முதல் 1945 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா ரகசியமாக வைத்திருந்தது. அணுகுண்டு சோதனைக்குப் பிறகு ஓப்பன்ஹைமர் மிகவும் நிம்மதியாக உணர்ந்தார் என்றும் நாளடைவில் அவர் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளானார். காரணம், அவருக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நன்கு தெரிந்து இருந்தது என்று அவரது நண்பர்கள் பகிர்கிறார்கள்.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 தேதி லிட்டில் பாய் ( யுரேனியம் அடங்கிய அணுகுண்டு) என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்டது. அடுத்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஃபாட் மேன் (புளூட்டோனியம் அடங்கிய அணுகுண்டு) ஜப்பானின் நாகாசாகியில் போடப்பட்டது . அதன்பின் நடந்த கொடூரங்கள் அச்சமூட்ட கூடியவை. ஜப்பானை உலுக்கிய இந்த அணுகுண்டு வெடிப்புகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிகழ்வு நடந்து 17 வருடங்களுக்குப் பிறகு 1962 -ல் தொலைக்காட்சியில் பேசிய ஓப்பன்ஹைமர், “இந்த உலகம் முன்பிருந்ததைபோல் இருக்கப்போவதில்லை என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். சிலர் சிரிக்கின்றனர். சிலர் அழுகின்றனர். சிலர் எப்போதும்போல் அமைதியாக இருக்கின்றனர். நான் இந்த நேரத்தில் இந்து மதத்தின் புனித நூலான கீதையில் கூறப்பட்ட வார்த்தையை நினைவுகூர விரும்புகிறேன்.இப்போது நான் மரணமாகிவிட்டேன், உலகத்தை அழிப்பவன்” இவ்வாறு தெரிவிக்கிறார்.

லாஸ் அலமோஸில் ஓப்பன்ஹைமர் இயக்குநராக இல்லாதிருந்தால், நல்லதோ அல்லது கெட்டதோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இரண்டாம் உலகப் போர் முடிந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஓப்பன்ஹைமருடன் பணிபுரிந்த ஜெர்மி பெர்ன்ஸ்டீன் பின்னாளில் பகிர்கிறார்.

ஜெர்மி பெர்ன்ஸ்டீன் வார்த்தைகள் மூலம் உலகின் போரின் போக்கை ஓப்பன்ஹைமர் எவ்வாறு மாற்றிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அணுகுண்டு கண்டுபிடிப்பின் பிற்பகுதியில் தன்னளவிலும் பல மாற்றங்களை ஓப்பன்ஹைமர் எதிர்கொண்டார். அணுகுண்டு கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவால் கொண்டாடப்பட்ட ஓப்பன்ஹைமர் பின்னாளில் அவரது காதலி கம்யூனிஸ்ட் கொள்கை கொண்டவர் என்ற காரணத்திற்காக சோவியத்தின் உளவாளி என்ற சந்தேக பார்வைக்கும் உள்ளானார்.. எனினும் ஓப்பன்ஹைமர் கம்யூனிச கொள்கையில் ரகசிய ஈடுபாடு கொண்டவராகவே அறியப்பட்டார்.

1967-ஆம் ஆண்டு ஓப்பன்ஹைமர் தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், கிலியன் மார்பி நடித்துள்ள ஓப்பன்ஹைமர் திரைப்படம் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x