Last Updated : 06 Jul, 2023 07:10 PM

 

Published : 06 Jul 2023 07:10 PM
Last Updated : 06 Jul 2023 07:10 PM

‘பொம்மை நாயகி’ யோகிபாபு, ‘விடுதலை’ சூரி, ‘மாமன்னன்’ வடிவேலு... - ஒரு புதிய பாதையின் தொடக்கம்!

பரிணாம வளர்ச்சி என்பது கடந்த கால இம்மெச்சூரிட்டியிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்வது. அப்படியான ஒரு பரிணாம வளர்ச்சியை நோக்கி தமிழ் சினிமா நகர்வதை உணர முடிகிறது. நகைச்சுவைக்கென தனி ‘ட்ராக்’ இருந்த காலம் காலாவதியாகி படத்துடன் இயைந்த காமெடிக் காட்சிகள் உருவாகின. அடுத்து ப்ளாக் காமெடியாக பரிணமித்தது. கவுண்டமணியின் ஜெராக்ஸாக உருவெடுத்த சந்தானத்தின் வருகைக்கு பிறகு ‘உருவக்கேலி’ செய்வது காமெடி என திணிக்கப்பட்டது. இந்த பாணியை நடிகர் யோகிபாபுவும் கெட்டிப்படுத்தியிருந்தார்.

வடிவேலு தன்னை தானே இகழ்ந்து சிரிக்க வைத்தார். விவேக் கருத்துடன் கூடிய காமெடியை கையாண்டார். இப்படியான போக்கிலிருந்து தமிழ் சினிமாவின் முகம் மாறி நகைச்சுவைக்கென தனி கலைஞர்கள் தேவையில்லை என்ற நிலையை அடைந்திருக்கிறது. சொல்லப்போனால் நகைச்சுவைக் காட்சிகளும் திணிக்கப்படாமல் முடிந்த அளவு கதையுடனே பிணைக்கப்பட்டு படமாக்கப்படுகின்றன.

யோகிபாபு: அப்படியான ஒரு பரிணமித்தலில் நகைச்சுவைக்கான ‘கலைஞர்கள்’ என முத்திரை குத்தப்பட்டு சுருக்கப்பட்டவர்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்து அழகுபார்த்திருக்கிறது 2023-ம் ஆண்டு. இந்த ஆண்டின் தொடக்கத்தையே எடுத்துக்கொள்வோம். ‘ஆமை முட்டை மண்டை’, ‘ஷாட்புட் தலையா’ என்றெல்லாம் உருவக்கேலியை காமெடியாக கருதிய யோகிபாபு, கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில், “கலாச்சு சிரிக்க வைக்குறதுல அப்படி என்ன சந்தோஷமோ. அதுல என்னா கெத்தோ. அது மூலமா தன்ன பெரிய காமெடியனா நெனைச்சிருக்காங்க போல” என பேசியிருப்பார். அவருக்கே ஒருவகையில் முரணான டயலாக்.

அதுவரை தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்திலிருந்து விலகி பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் நின்று பேசியிருந்தது முக்கியமானது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தாண்டு தொடக்கத்தில் ‘பொம்மை நாயகி’ வெளியானது. தன் மகளுக்காக ஊரை எதிர்க்கும் பொறுப்புள்ள தந்தையாக அவரின் நடிப்பு மெச்சத்தக்கது. எந்த ஃப்ரேமிலும் வழக்கமான யோகிபாபுவை பார்க்கவே முடியாது. தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு முழுமையாக நியாயம் சேர்த்து தேர்ந்த கலைஞன் என்பதை நிரூபித்திருப்பார்.

அவரை காமெடிக்காக மட்டுமே சுருக்கி வைத்திருந்தது பெரிய தவறு என்பதையும் உணர வைத்திருப்பார். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தந்தையாக தன் மகள் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து பூரிக்கும் காட்சிகள், இயலாமையை வெளிப்படுத்தும் காட்சிகள் என மொத்தப் படத்திலும் யதார்த்துக்கு நெருக்கமான நடிப்பை பதிவு செய்திருப்பார் யோகிபாபு. உண்மையில் யோகிபாபுவை இப்படியொரு கதாபாத்திரத்துக்குள் பொருத்தி அவரது கேரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்து ஷான் அதளகளப்படுத்தியிருந்தார்.

சூரி: பிப்ரவரியில் யோகிபாபு என்றால், மார்ச் இறுதியில் சூரி. ‘டேங்க்யூ மாமா’ என தனக்கென ஒரு கிராமத்து ஸ்லாங்கை உருவாக்கி கவனிக்க வைத்தவர். சூரிக்கான தனி சீரியஸ் காட்சிகள் என்பது மிகவும் சொற்பம். பெரும்பாலும் நாயகனை எதிர்த்தோ அவருடன் இணைந்து கலாய்த்துகொண்டு ஜாலியாக வலம் வந்த ஒருவரை ‘விடுதலை பாகம் 1’ படத்தில் மொத்தமாக உருமாற்றியிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.

கடைநிலை காவலர். அவருக்கென ஒரு காதல். காதலியை மீட்க மேற்கொள்ளும் போராட்டம். இந்தக் கதைக்குள் முழுமையாக பொருந்தி, தன் வழக்கமான உடல்மொழியிலிருந்து விடுப்பட்டு, அதிகாரத்தை எதிர்க்க முடியாமல் தவிக்கும் ஒரு சாமானிய அரசு ஊழியராக மிரட்டியிருந்தார் சூரி. அதுவரை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க நகைச்சுவை சூரியை திடீரென ஒரு படத்தில் மறைத்து வேறொருவராக பரிணமித்ததன் உழைப்பு திரையில் தெரிந்தது. அவரின் அடுத்தப் படமான ‘கொட்டுக்காளி’ டீசரில் கைநடுங்க பீடியை பிடித்துக்கொண்டே பதற்றத்துடன் அதை தூக்கி எரியும் காட்சி சூரியை தேர்ந்த கலைஞனாக உருமாற்றியிருந்தது.

வடிவேலு: ‘லாங்ல பாத்தா தான்டா காமெடியா இருப்பேன். கிட்டத்துல பாத்தா டெரரா இருப்பேன்டா டெரரா..’ என வடிவேலு வசனம் ஒன்றை பேசியிருப்பார். அப்படி நடிப்பில் ‘டெரரான’ வடிவேலைத்தான் ‘மாமன்னன்’ படத்தில் வார்த்தெடுத்திருக்கிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ். ‘மாமன்னன்’ படத்தில் ஒரு காட்சியில் ‘இதோ வந்துட்றேன்’ என கூறிவிட்டு தனியே சென்று கண்கலங்கும் இடத்தில் கல் நெஞ்சம் கொண்டவரையும் கரைய வைத்திருக்கும் அவரது நடிப்பு. ‘வடிவேலுவை வெறும் காமெடியொடு சுருக்கிவிட்ட தமிழ் சினிமா’ மீது அவரது ரசிகர்களுக்கு இருந்த கோபம் ‘மாமன்னன்’ படத்துக்கு பின் அதிகரித்தது.

காரணம் அவரது கம்பேக்கான ‘நாய் சேகர்’ மூலம் வடிவேலுவை ரசிகர்கள் மீண்டும் ஒரே மாதிரியான காமெடி கதாபாத்திரத்துக்குள் அடைத்து வைத்து பார்க்க விரும்பவில்லை. அவருக்கான இரண்டாவது இன்னிங்ஸ் என்பது ‘கலைஞன்’வடிவேலுவுக்கானது. அதனை மிகச்சரியாக மாரிசெல்வராஜ் கையாண்டிருந்தார்.

கையில் அதிகாரம் இருந்தும் விடுதலை பெற முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும், இயலாமையையும் படம் நெடுக சுமந்து வரும் வடிவேலு தன் மனைவியின் காலை பிடித்து பேசும் காட்சியில் வெடித்திருப்பார். வடிவேலுவுக்கு ப்ளஸ் அவருடைய உடல்மொழி. தன்னுடைய நகைச்சுவை கலந்த வழக்கமான அந்த உடல்மொழியை எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.

‘நாய்சேகர்’, ‘மாமன்னன்’ இரண்டு படங்களுக்கும் அவர் காட்டியிருக்கும் வேறுபாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எல்லையைத் தொட்டிருக்கும். இப்படியான ஒரு ‘எக்ஸ்ட்ரீம்’ மாற்றத்தை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலைஞனை இனியும் காமெடியனாக மட்டுமே சுருக்கி பார்க்க பார்வையாளர்கள் விரும்பவில்லை என்பது ‘நாய்சேகர்’ படத்தின் ரிசல்ட்.

யோகிபாபவு, சூரி, வடிவேலு வரிசையில் தற்போது சந்தானமும் தன்னை வழக்கமான ‘உருவகேலி’, கலாய் காமெடிகளிலிருந்து விடுவிக்க முயன்று வருகிறார். குலுகுலு’ மற்றும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ அதுக்கான சான்றுகள். உண்மையில் இப்படியான கலைஞர்களை இத்தனை ஆண்டுகள் வெறும் நகைச்சுவை கதாபாத்திரத்துடன் சுருக்கியதுக்கு தமிழ் சினிமா இந்தாண்டின் வாயிலாக பிராய்ச்சித்தம் தேடியுள்ளது.

‘பொம்மை நாயகி’, ‘விடுதலை’, ‘மாமன்னன்’ மூன்று படங்களுமே நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள் நடித்த படங்கள். ஆனால் மூன்றிலுமே காமெடிக்கான களமே இருக்காது. இந்தப் படங்களுக்கான வரவேற்பின் மூலம் ‘கன்டென்ட்’ தான் ‘கிங்’ என்பதும், இனியும் திணிக்கப்பட்ட காமெடியும், அதன்வழி சுருக்கப்படும் நகைச்சுவை நடிகர்களும் தேவையில்லை என்ற புதியப் பாதையை நோக்கி சினிமா முன்னேறுவதை புரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x