ரூ.9 கோடி வாங்கிவிட்டு கால்ஷீட் தர மறுக்கிறார்: நடிகர் சுதீப் மீது தயாரிப்பாளர் புகார்
பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவனப்புடி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘விக்ராந்த் ரோணா’ பான் இந்தியா படமாக தமிழிலும் வெளியானது. இந்நிலையில் இவர் மீது கன்னட தயாரிப்பாளர் எம்.என்.குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இவர், சுதீப் நடித்த, ‘ரங்கா எஸ்.எஸ்.எல்.சி’, ‘காசி ஃபிரம் வில்லேஜ்’, ‘மானிக்யா’, ‘முகுந்தா முராரி’ படங்களைத் தயாரித்தவர்.
தயாரிப்பாளர் எம்.என்.குமார் கூறும்போது, “8 வருடத்துக்கு முன், நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க, மொத்தப் படத்துக்கான சம்பளத்தையும் பெற்றார் சுதீப். அதாவது ரு.9 கோடி கொடுத்தேன். அவர் வீட்டு சமையலறையை புதுப்பிக்க ரூ.10 லட்சம் கேட்டார். அதையும் கொடுத்தேன். இந்தப் படத்துக்காக, முத்தட்டி சத்யராஜூ (Muttatti Satyaraju) என்ற தலைப்பை பிலிம் சேம்பரில் பதிவு செய்து வைத்திருந்தேன். ஆனால், அந்த தலைப்பை தமிழ் தயாரிப்பாளர் (கலைப்புலி எஸ்.தாணு) தயாரிக்கும் படத்துக்கு வைத்துள்ளார். ஒவ்வொரு படம் முடிந்ததும் அடுத்து பார்க்கலாம் என்று சொல்லி வந்தவர், இப்போது போனையும் எடுப்பதில்லை. அவர்மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
