Published : 04 Jul 2023 07:18 AM
Last Updated : 04 Jul 2023 07:18 AM

தீவிர அரசியலில் ஈடுபட சினிமாவில் இருந்து விலகுகிறாரா விஜய்?

சென்னை: நடிகர் விஜய் இப்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், விஜய் நடிக்க இருக்கிறார். இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடந்த மாதம் உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' திட்டம் மூலம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.

கடந்த மாதம், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு நடிகர் விஜய், கல்வி உதவி தொகை வழங்கினார். மற்றும் அவர் பிறந்த நாளன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

2026-ம் ஆண்டு தமிழக சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக இதை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக வெங்கட் பிரபு இயக்கும் படத்துடன் நடிப்புக்கு சில வருடங்கள் ஓய்வு கொடுத்து விட்டு, களப்பணியில் அவர் இறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி நடிகர் விஜய் தரப்பில் விசாரித்தபோது, “நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா, எப்போது வருகிறார் என்பது பற்றி அவர்தான் அறிவிக்க வேண்டும். யாரோ எழுதுகிற, பேசுகிற விஷயங்களுக்கு எங்களிடம் பதிலும் இல்லை. அதில் உண்மையுமில்லை” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x