Published : 03 Jul 2023 11:27 AM
Last Updated : 03 Jul 2023 11:27 AM
சென்னை: திமுகவில் இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி களைவார் என்று நம்புவோம் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘மாமன்னன்’ திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூகநீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும் பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று ‘மாமன்னன்’. உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பா.ரஞ்சித் தனது பதிவில் கூறியுள்ளார்.
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.…
— pa.ranjith (@beemji) July 3, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT