Published : 28 Jun 2023 11:02 AM
Last Updated : 28 Jun 2023 11:02 AM

‘ஆதிபுருஷ்’ சர்ச்சைக்கு நடுவே மீண்டும் ஒளிபரப்பாகும் ‘ராமாயணம்’

மும்பை: ‘ஆதிபுருஷ்’ சர்ச்சைகளுக்கு நடுவே 1987ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற ‘ராமாயணம்’ தொடர் தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

ராமானந்த சாகர் தயாரிப்பில் உருவான ‘ராமாயணம்’ தொடர், 1987-ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமராகவும், நடிகை தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர். அப்போதே நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரைப் பார்த்தனர்.

அதன்பிறகு கரோனா ஊரடங்கின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி ‘ராமாயணம்’ தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது. உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற உலக சாதனையை ‘ராமாயணம்’ தொடர் படைத்ததாகவும் தூர்தர்ஷன் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

சமீபத்தில் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கடும் எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. மோசமான கிராபிக்ஸ், சர்ச்சை வசனங்கள், ராமர், சீதை, அனுமார் குறித்த சித்தரிப்பு உள்ளிட்டவை கடுமையாக விமர்சிக்கப்பட்டன. பழைய ‘ராமாயணம்’ தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் உள்ளிட்ட பலரும் இப்படத்தை கடுமையாக சாடியிருந்தனர்.

இத்தகைய சூழலில் ராமானந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடர் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஷெமாரூ டிவியில் இந்த தொடர் வரும் ஜூலை 3 முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடர் மொத்தம் 78 எபிசோட்களை கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x