Published : 24 Jun 2023 03:12 PM
Last Updated : 24 Jun 2023 03:12 PM
“காதலுக்கான மொழி இன்று மாறிவிட்டது. அதைத்தான் சினிமாவும் பிரதிபலிக்கிறது. 1990-களில் காதல் என்று நினைத்தவை இன்று ஸ்டாக்கிங்காக மாறியுள்ளது” என நடிகை கஜோல் பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ தொடர் வரும் ஜூன் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “காதலுக்கான மொழி இன்று மாறிவிட்டது. அதைத்தான் சினிமாவும் பிரதிபலிக்கிறது. 1990-களில் காதல் என்று நினைத்தவை இன்று ஸ்டாக்கிங்காக மாறியுள்ளது. இப்போது யாராவது ஒருவர் 15 கடிதங்களை எழுதி, 10 முறை உங்கள் வீட்டு கதவை தட்டி, உங்களுக்கு 30 டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பினால் அவர் ஒரு ஸ்டாக்கர், அவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய நிலைமை” என்றார்.
மேலும், “ஒரு நடிகராக உங்களுக்கு பொருந்தாத விஷயங்களை செய்ய வேண்டாம். மாறாக, உங்களால் என்ன முடியுமோ, உங்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்யுங்கள். நான் அப்படித்தான் செய்கிறேன். நான், என் இயக்குநரிடம் பேசி இது என்னால் பண்ண முடியுமா, கம்ஃபர்டபிளாக இருக்குமா என்பதை உறுதி செய்த பின்பே நடிக்க ஒப்புக்கொள்வேன்.
இனியும் பழைய சினிமாவின் ஃபார்முலா இங்கே எடுபடாது. காரணம், எல்லோரும் நீங்கள் எடுப்பதைவிட நல்ல சினிமாவை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உலக சினிமாவை பார்க்கும் வெளி, பரவலாகியிருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் இந்தி சினிமாவை மட்டுமே அதிக அளவில் பார்த்தார்கள் என்பதால் நடிகர்களும் அவர்களை சமகாலத்தவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டனர். ஆனால், அதெல்லாம் இனியும் எடுபடாது என்றே எனக்கு தோன்றுகிறது. ஒருவர் மாற்றத்துக்கு தகுந்தாற்போல புதுமையை உள்வாங்கி கற்று கொள்ளவில்லை என்றால் அவர் இந்த யுகத்துக்கு பொருத்தமில்லாமல் காலாவதியாகிவிடுவார்” என்று கஜோல் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT