Published : 23 Jun 2023 08:16 AM
Last Updated : 23 Jun 2023 08:16 AM
சென்னை: ‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படம் பற்றி தான் பேசியது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பின. கமல் ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி வந்தனர்.
இந்த நிலையில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்த தனது பேச்சுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
அது மிகவும் எமோஷனலான ஒரு தருணமாக இருந்தது. கமல்ஹாசன் போன்ற ஓர் ஆளுமை படத்தைப் பார்த்து விட்டார். மேடையில் என் படத்தைப் பற்றி பேசப் போகிறார். அப்போது நான் எவ்வளவும் எமோஷனலாக இருந்தேன் என்று அவருக்குத் தெரியும். 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் என்பது அன்றைக்கு இருந்த கோபம், மொழி ஆகியவற்றால் எழுதப்பட்டது. அப்போது எனக்கு வாசிப்புப் பழக்கம் எல்லாம் கிடையாது.
தமிழ் சினிமாவிலேயே ‘மாமன்னன்’ படத்தைப் பார்த்த ஒரே ஆள் கமல்ஹாசன் மட்டும்தான். அந்தப் படத்தை அவருடன் பார்க்கும்போது நான் எவ்வளவும் எமோஷனலாக இருந்தேன் என்பது எனக்கும் அவருக்கும் மட்டும்தான் தெரியும். என் படத்தைப் பார்த்துவிட்டு என்னை அவர் அங்கீகரித்துவிட்டார், என் கையைப் பிடித்து என்னைப் பாராட்டினார் என்பது என் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை. என் முன்னால் அவர் அமர்ந்திருக்கும்போது, இத்தனை நாட்களாக எனக்குள் இருந்த விஷயத்தை அன்று பேசவில்லையென்றால் வேறு என்றைக்கு பேசுவது. நான் பேசும்போதே தெரியும். எங்கேயோ தொடங்கி எங்கேயோ போயிருப்பேன்.
மேடையில் கமல்ஹாசன் பேசும்போது, ‘இப்படம் மாரியின் அரசியல் மட்டுமல்ல, நம் அனைவரது அரசியலும் கூட’ என்று பேசினார். இதற்கு மேல் என்ன வேண்டும்? அதுதான் என்னுடைய வெற்றி என்று கூட சொல்லலாம். அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த அந்த அன்பையும் அரவணைப்பையும் நான் இழக்க விரும்பவில்லை. யாரிடம் இதையெல்லாம் பேசினேன்? கலைக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய, கலையை புரிந்துகொள்ள கூடிய ஒரு ஆன்மா, ஓர் ஆளுமையிடம் பேசினேன். அவரும் எனக்கு ஆதரவாகப் பேசி, என் தலையை தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதைவிட என்ன வேண்டும்?
இன்னும் சொல்லப்போனால் அப்பாவுக்கும் மகனுக்கும் உண்டான ஒரு கோபம்தான் இது. அப்பாவை சரியாக புரிந்து கொள்ளாமல் கோபத்தில் வீட்டை விட்டுச் சென்ற பையன் அப்பாவிடம் பேசியது போன்ற ஒரு தருணமாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன்.
இவ்வாறு மாரி செல்வராக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT