Published : 18 Jun 2023 02:27 PM
Last Updated : 18 Jun 2023 02:27 PM

ஏழை தகப்பன்களின் தியாகங்களின் சாட்சியாய் ’தவமாய் தவமிருந்து...’ | Father's Day Special

இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவை எடுத்துக் கொண்டால்கூட தந்தையின் பெருமையைப் பேசும் சினிமாக்கள் வெகு சொற்பம்தான். தாயின் வலியையும், அன்பையும் ஏன் வலிமையையும்கூட பேசும் சினிமாக்கள் ஓராயிரம் உண்டு. பாடல்களை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். தமிழில் அந்தக் குறையைப் போக்கும் விதமாக 2005ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான படம் ‘தவமாய் தவமிருந்து’.

ஐந்து பாட்டு, மூன்று ஃபைட்டு என்ற எழுதப்படாத விதிகளுடன் சினிமாக்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எந்தவித மசாலாத்தனங்களும், போலி மேற்பூச்சுகளும், செயற்கைத்தனங்களும் இன்றி ஒரு ஏழை தகப்பனின் வாழ்க்கையை மிக இயல்பாக அதன் போக்கிலேயே நம் கண்முன் வடித்திருப்பார் சேரன். சுமார் மூன்றரை மணிநேரம் ஓடக்கூடிய இந்தப் படம் ஒரு தந்தையின் 35 வருட வாழ்க்கையை தத்ரூபமாக காட்சிப்படுத்தியது. படத்துக்கு தொடர்பில்லாத தனி காமெடி டிராக், தேவையற்ற காதல் காட்சிகள், நெஞ்சை நக்கும் செண்டிமெண்ட் வசனங்கள் என அனைத்தையும் வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை மிக துணிச்சலுடன் தவிர்த்திருப்பார் சேரன்.

படம் வெளியாகும் முன்பே பல பேட்டிகளில் இப்படத்தில் ராஜ்கிரண் தான் நாயகன் என்று சேரன் சொல்லியிருந்தார். அதனை நிரூபிக்கும் விதமாக ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து, குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை நகர்த்த போராடும் ஒரு சிறிய பிரிண்டிங் பிரஸ் முதலாளியாக வாழ்ந்திருப்பார் ராஜ்கிரண்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சி. மறுநாள் தீபாவளி. கையில் சுத்தமாக பணமிருக்காது. தந்தை வீட்டுக்கு வரும்போது வெடி, புத்தாடைகளை வாங்கி வருவார் என்று மகன்கள் காத்திருக்கின்றனர். அரசியல் கட்சிக்காக போஸ்டர்களை அடித்து முடித்து பணத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் கட்சிக் கூட்டம் ரத்தாகிறது.

இருண்ட முகத்துடன் செய்வதறியாமல் திணறும் தருணத்தில் கடவுளின் குரல் போல ஒரு தொலைபேசி அழைப்பு வரும். 2000 போஸ்டர்களை ஒட்டித் தந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக அந்த குரல் சொல்லும். இரவு முழுக்க போஸ்டர் ஒட்டிவிட்டு அதில் கிடைத்த 1000 ரூபாயில் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், பட்டாசுகளும் வாங்கிச் செல்வார். 80,90-களில் வளர்ந்த குழந்தைகளில் பெரும்பாலானோரால் இந்தக் காட்சியை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புப் படுத்திப் பார்க்க முடியும். இந்த ஒட்டுமொத்த காட்சியும் ஒரு அழகிய சிறுகதையை போல வடிக்கப்பட்டிருக்கும்.

மகன்களை சிரமப்படாமல் வளர்க்க வட்டி வாங்குவது, வட்டிக்கடைக்காரரிடம் படும் அவமானத்தை மகன்களின் முன்னால் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சிப்பது, மூத்த மகன் விபச்சார கேஸில் மாட்டிக் கொண்டதை மறுநாள் போலீஸ்காரர் ஒருவரின் மூலம் தெரிந்து இடிந்து போவது என படம் முழுக்க தனி ராஜபாட்டையே நடத்தியிருப்பார் ராஜ்கிரண்.

கர்ப்பமாக இருக்கும் காதலியை கரம்பிடிக்க வீட்டை விட்டு ஓடிப் போக முடிவெடுப்பார் ராஜ்கிரணின் இளைய மகன் சேரன். தாய், தந்தையிடம் கோவையில் நேர்காணலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கும்போது, எதுவும் அறியாத தந்தை அவரை ஆசிர்வதித்து அனுப்புவார். குற்ற உணர்ச்சியில் வெடித்து அழுவார் சேரன். இந்த காட்சி கல்நெஞ்சத்தையும் கரைத்துவிடும்.

தந்தையைப் பற்றிய படமென்றாலும் ராஜ்கிரணுக்கு இணையாக சரண்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மூத்த மருமகள் தன் கணவனை மரியாதைக் குறைவாக பேசும்போது எரிமலையாய் வெடிப்பது, ஓடிப்போன மகன் திரும்பி வரும்போது முகத்தை திருப்பிக் கொள்வதும், கைக்குழந்தையான தனது பேரனை பார்த்ததும் கரைந்து கண்ணீர் விடுவது என வாழ்நாள் முழுக்க பேர் சொல்லும் நடிப்பை வழங்கியிருப்பார் சரண்யா.

மகன் சென்னையில் அல்லபடுவதை அறிந்து அட்ரஸ் தேடிச் சென்று பணம் கொடுத்து வருவது, மருமகளின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை சமாதானம் செய்வது, மனைவி இறந்தபிறகு தனிமையைத் தேடி தனது பழைய வீட்டுக்குச் சென்று இருப்பது என படம் முழுக்கவே உணர்வுப்பூர்வமான காட்சிகளால் இழைக்கப்பட்டிருக்கும். தந்தை மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கையில் அச்சு இயந்திரத்தை மிதித்து மிதித்து காயமுற்ற தந்தையின் பாதங்களை சேரன் தொட்டுப் பார்க்கும் காட்சியும், வாழ்நாள் முழுக்க தந்தையை மதிக்காமல் இருந்த மூத்த மகன், தந்தை இறந்தபின்பு அவர் தன்னையும் தன் தம்பியை வைத்து மிதித்துச் சென்ற சைக்கிளை உட்கார்ந்து துடைக்கும் காட்சியும், பார்ப்பவர் கண்ணில் இருந்து கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்யும்.

'Right Movie in the Wrong Timeline' என்பதற்கு இப்படம் ஒரு சான்று. அப்போதைய ரசிகர்களால் இப்படம் வசூல்ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது. உலக சினிமாக்களை அங்குலம் அங்குலமாக பிரித்து மேயும் இன்றைய ஓடிடி காலகட்டத்தில் இப்படம் வெளியாகியிருந்தால் நிச்சயம் கொண்டாடப்பட்டிருக்கும்.

“நீ உன் வாழ்க்கையில் சாதித்தது என்ன? என்று என்னிடம் யாராவது கேட்டால் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை எடுத்துக் காட்டுவேன்” என்று பழைய பேட்டி ஒன்றில் சேரன் கூறியிருந்தார். அந்த அளவுக்கு தந்தையின் அன்பை அழுத்தமாகவும் ஆழமாகவும் தமிழில் பதிவு செய்த முதன்மையான சினிமா இது.

தமிழில் இதுவரை வெளியான மிகச்சிறந்த சினிமாக்களை பட்டியலிட்டால் அதில் சேரனில் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை முதல் ஐந்து இடங்களுக்குள்ளேயே கட்டாயம் கொண்டு வரமுடியும். இயக்கம், திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என எந்தவகையிலும் குறைசொல்லிவிட முடியாத ஒரு முழுமையான கலைப் படைப்பு இந்த ‘தவமாய் தவமிருந்து’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x