Published : 15 Jun 2023 03:38 PM
Last Updated : 15 Jun 2023 03:38 PM
டிசி காமிக்ஸின் முக்கிய அங்கமான ஃப்ளாஷ் கதாபாத்திரத்தை பிரதானமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் ‘தி ஃப்ளாஷ்’ (The Flash) திரைப்படம், டிசி அனிமேஷன் அளவுக்கு டிசி படங்கள் திரைக்கதை ரீதியாக சோபிப்பதில்லை என்ற தொடர் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததா என்று பார்க்கலாம்.
கோதம் நகரில் வசிக்கும் ‘தி ஃப்ளாஷ்’ ஆன பேரி ஆலன் (எஸ்ரா மில்லர்) ஒரு எதிர்பாராத தருணத்தில் தன்னால் டைம் ட்ராவல் செய்யமுடியும் என்பதை தெரிந்துகொள்கிறார். இதனை தனது நண்பரான பேட்மேனிடம் (பென் அஃப்ளெக்) தெரிவித்து விட்டு, சிறுவயதில் கொலை செய்யப்பட்ட தனது தாயையும், செய்யாத கொலைக்காக பல ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வரும் தனது தந்தையையும் காப்பாற்ற நினைக்கிறார். காலத்தில் பின்னோக்கி செல்லும் அவர் தனது பழைய வீட்டில் இளவயது பேரியை சந்திக்கிறார். மின்னல் மூலம் கடந்தகால பேரிக்கு அதிவேக சக்தி கிடைக்கும் நேரத்தில், எதிர்பாராத விதமாக தன்னுடைய சக்தியை இழக்கிறார் நிகழ்கால பேரி. அதே ஊரில் பேட்மேனும் இருப்பதை தெரிந்து கொள்ளும் அவர், இளவயது பேரியுடன் அவரைப் பார்க்க செல்கிறார். ஆனால் அங்கு இருப்பது வேறொரு பேட்மேன் (மைக்கேல் கீட்டன்).
இன்னொருபுறம் கிரிப்டான் கிரகத்திலிருந்து வந்த வில்லனான ஜெனரல் ஸாட் (மைக்கேல் ஷானன்) பூமியை அழிக்க முயற்சிக்கிறார். அவரை தடுக்க வேண்டுமெனில் மற்றொரு கிரிப்டானியன் ஆன சூப்பர் மேனின் உதவி தேவை. சூப்பர் மேன் ரஷ்யாவில் இருப்பதை தெரிந்துகொண்டு மூவரும் அங்கு செல்கின்றனர். ஆனால் அங்கு இருப்பதோ ஒரு சூப்பர் கேர்ள் (ஷாஷா கேல்). இவர்கள் அனைவரும் சேர்ந்து வில்லனை தடுத்தார்களா? பேரி ஆலன் காலப் பயணம் செய்து வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே ‘தி ஃப்ளாஷ்’ படத்தின் கதை.
மார்வெல் நிறுவனம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு மல்டிவெர்ஸ் என்ற கான்செப்டை கையிலெடுத்தது. ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ மற்றும் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்: மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ ஆகிய படங்கள் இதனை சாத்தியப்படுத்தின. தற்போது ‘தி ஃப்ளாஷ்’ படம் மூலம் டிசி காமிஸும் இந்த கான்செப்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
இதுவரை வெப் தொடர் தவிர்த்து ‘ஜஸ்டிஸ் லீக்’ படங்களில் மட்டுமே இடம்பெற்றிருந்த ’தி ஃப்ளாஷ்’ கதாபாத்திரத்துக்கென தனியாக வந்திருக்கும் முதல் படம் இது. இதில் ஃப்ளாஷ் பாத்திரத்தின் கடந்த காலம், அவரது ஆளுமை, சூப்பர் பவர் ஆகியவற்றை விரிவாகவும், ஆழமாகவும் இதில் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. உதாரணமாக இதுவரை வந்த படங்களில் வேகம் மட்டுமே ஃப்ளாஷ் கதாபாத்திரத்தின் சக்தியாக காட்டப்பட்டு வந்த நிலையில், இப்படத்தில் காலப் பயணம் செய்வது, சுவருக்குள் ஊடுருவிச் செல்வது உள்ளிட்ட அவரது சூப்பர் பவர்கள் வெளிப்படுகின்றன.
அதேபோல இப்படத்தில் டிசி யுனிவர்ஸின் பல மரபுகள் உடைக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். டிசி காமிக்ஸுக்கே உரிய ஒருவித இருண்ட பின்னணி இப்படத்தில் இல்லை. பெரும்பாலான காட்சிகள் கலர்ஃபுல்லாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், படம் முழுக்க வரும் நகைச்சுவை வசனங்களும் கைகொடுத்துள்ளன.
ஆனால், இப்படம் டிசி காமிக்ஸை பல காலமான பின்தொடர்பவர்களைத் தாண்டி வெகுஜன ரசிகர்களை கவருமா என்றால், அது சந்தேகமே. காரணம், படத்தில் மல்டிவெர்ஸ் என்ற கான்செப்டை விளக்கிய விதமே மிகவும் குழப்பமாக உள்ளது. நாயகன் ஃப்ளாஷ், டைம் டிராவல் செய்து வந்திருப்பது வேறொரு யுனிவர்ஸா அல்லது அவரால் மாற்றியமைக்கப்பட்ட டைம்லைனா என்பதற்கு தெளிவான பதில் இல்லை. இவ்வளவு நாள் இல்லாமல் எப்படி திடீரென ‘Chrono-Bowl' என்ற ஒரு வஸ்துவில் சிக்கி நாயகனால் டைம் டிராவல் செய்ய முடிந்தது என்ற கேள்வி எழாமல் இல்லை.
1989-ல் பேட்மேனாக நடித்திருந்த மைக்கேல் கீட்டனை மீண்டும் பேட்மேனாக கொண்டு வந்தது சிறப்பான ஐடியா. அவருக்கான காட்சிகளும் படத்தில் நியாயம் சேர்ப்பவையாகவே உள்ளன. சூப்பர் கேர்ளாக வரும் ஷாஷா கேலுக்கான காட்சிகள் அழுத்தமாக இல்லை. அரங்கம் அதிர்ந்திருக்க வேண்டிய அவரது அறிமுகக் காட்சியில் மயான அமைதி நிலவுகிறது. அதேபோல க்ளைமாக்ஸ் காட்சியில் பழைய டிசி கதாபாத்திரங்களின் பல்வேறு ரெஃபெரன்ஸ்களை கொண்டு வந்தாலும் அவை அனைத்தும் தேமேவென்றே செல்கின்றன. மயிர்க் கூச்செரியச் செய்திருக்க வேண்டிய காட்சிகள் அவை. படத்தில் வரும் எமோஷனல் காட்சிகளும் பெரிதாக கைகொடுக்கவில்லை. க்ளைமாக்ஸில் டிசி ரசிகர்களுக்கு பல சர்ப்ரஸ்கள் உள்ளன. போஸ்ட் கிரெட்டி சீன் ஒன்றும் உள்ளது.
டிசி காமிக்ஸ் மற்றும் அனிமேஷன் படைப்புகளைப் போல டிசி படங்கள் திரைக்கதை ரீதியாக சோபிப்பதில்லை என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. ‘தி ஃப்ளாஷ்’ அதனை முறியடிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ட்ரெய்லர்களால் எழுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக திரைக்கதையை சீராக எழுதியிருந்தால் டிசி யுனிவர்ஸின் முக்கிய படமாக மாறியிருக்கும் ‘தி ஃப்ளாஷ்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT