Last Updated : 10 Jun, 2023 05:24 PM

 

Published : 10 Jun 2023 05:24 PM
Last Updated : 10 Jun 2023 05:24 PM

‘டாடா’ முதல் ‘போர் தொழில்' வரை - 2023 தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்கள் ஆதிக்கம்

குறைந்த பட்ஜெட்டில் மக்கள் ரசிக்கும் வகையிலான படைப்புகளை உருவாக்கித் தர முடியும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களிடையே அறிமுக இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் நடப்பு ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான ஆண்டு. ஒவ்வொரு மாதமும் ஓர் அறிமுக இயக்குநரின் புதிய படம் வெளியாகி முன்னணி நடிகர்களின் படங்களைத் தாண்டி வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் துளிர்விட்டிருக்கும் இந்தப் போக்கு உண்மையில் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அடுத்தடுத்து சினிமாவுக்குள் இயக்குநராக அடியெடுத்து வைக்க ஆசைப்படும் புதுமுக இயக்குநர்களுக்கான வெளியை இந்தப் படங்கள் உருவாக்கி கொடுத்துள்ளன. அப்படியாக இந்த ஆண்டில் இதுவரை வெளியாகி ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய இயக்குநர்களின் படங்களைப் பார்ப்போம்.

டாடா: அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாடா’. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்திருந்தார். காதலித்து திருமணம் முடித்த காதலர்கள் யதார்த்த வாழ்க்கைக்குள் நுழையும்போது ஏற்படும் சமூக - பொருளாதார சிக்கல்களையும், அதன் நீட்சியாக உறவில் ஏற்படும் விரிசலையும் பேசியது படம். தந்தை பாசத்தை மையப்படுத்தி உருவான இப்படம் பெரிய அளவில் ரசிகர்களுக்கு தொய்வை தராத திரைக்கதையாலும், சில எமோஷனல் தருணங்களாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.20 கோடி வசூலைத் தாண்டி வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது.

அயோத்தி: புதுமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த படம் ‘அயோத்தி’. டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார். மதம் கடந்த மனிதநேயத்தின் தேவையை வலியுறுத்தும் இப்படம் மனித உணர்வுகளில் ஆதிக்கம் செலுத்தியது.

சென்சிட்டிவான கதையை இப்படம் அணுகிய விதம் தற்கால இந்திய அரசியல் சூழலில் மிக முக்கியமான படமாக பார்க்கப்பட்டது. கதைக்காக நடந்த சர்ச்சையைத் தாண்டி குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘அயோத்தி’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என போராடிக்கொண்டிருந்த சசிகுமாருக்கு முக்கியமான படமாக இது அமைந்தது.

யாத்திசை: பிப்ரவரி, மார்ச்,என வரிசையாக அறிமுக இயக்குநர்களின் படங்கள் மாதத்துக்கு ஒன்று என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த போது, ஏப்ரல் 21-ம் தேதி இயக்குர் தரணி ராசேந்திரன் இயக்கதில் வெளியான படம் ‘யாத்திசை’. தமிழின் முக்கியமான ஆவணப்பதிவாக உருவான இப்படத்தின் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்கள். ‘அதிகார’த்தை அடைய பேரரசை எதிர்க்கும் சிறு குடியின் தகிக்கும் போராட்டம் ‘யாத்திசை’.

வரலாற்று படங்களுக்கான ரொமான்டிசைஸ்களை உடைத்து யதார்த்திற்கு நெருங்கமாக கொண்டுபோய் சேர்த்த கலைப்படைப்பு. அறிமுக படக்குழு இப்படியான அழுத்தமான கதைகளத்தை நேர்த்தியாக கையாண்ட விதம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன், விவாதத்தையும் ஏற்படுத்தியது. ரூ.7-10 கோடியில் வரலாற்று படங்களை உருவாக்கிவிட முடியும் என நிரூபித்த இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.20 கோடியைத் தாண்டி வசூலித்து வியாபரம், விமர்சனம் இரண்டிலும் கொடி நாட்டியது.

பிச்சைக்காரன் 2: இந்தப் படத்துக்கு மட்டும் அறிமுக இயக்குநர் என சுருக்கி சொல்லிவிட முடியாதபடி படத்தை இயக்கியும், படத்தொகுப்பு செய்தும் இரண்டு பிரிவுகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் விஜய் ஆண்டனி. கடந்த மே 19-ம் தேதி வெளியான இப்படம் ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்டு ரூ.36 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.

‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்தின் வெற்றியால் ஏற்பட்ட எதிர்பார்ப்பை முடிந்த அளவுக்கு பூர்த்தி செய்ததன் எதிரொலி இந்த வசூல். வர்க்க ரீதியான பிரச்சினையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இப்படத்தின் திரைக்கதை மூளை மாற்று சிகிச்சை உள்ளிட்ட சில புதிய அட்டம்ப்ட்டுகளை தொட்டிருக்கும். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் இயக்குநராக அறிமுகமான விஜய் ஆண்டனி வசூலில் சாதித்து காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

குட் நைட்: குறட்டையை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான ‘ஃபீல்குட்’ படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். குறட்டைதான் மையம் என்றாலும் அதைச் சுற்றி நாயகனின் குடும்பம், நாயகிக்கென தனித்துவப் பின்னணி, அழகான காதல் காட்சிகள், திருமண வாழ்வில் ஏற்படும் இயல்பான பிரச்சினைகள் என திரைக்கதையை ரசிக்கும்படியாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் தயாரித்திருந்தனர். இப்படத்துடன் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி போட்ட போதிலும் வலுவான திரைக்கதையால் ஹிட்டடித்தது.

போர் தொழில்: அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்துள்ள திரைப்படம் ‘போர் தொழில்’. ஜூன் 9-ம் தேதி வெளியான இப்படம் க்ரைம் - த்ரில்லர் வகையறா படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சீரியல் கொலைகாரன் ஒருவனை தேடிக் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரிகள் என தொடங்கும் இப்படம் அதன் வெரைட்டியான லேயர்களால் ரசிக்க வைத்தது.

மேலும், குற்றவாளின் சமூக - உளவியல் காரணங்களையும் பளிச்சிட்டு, எந்த இடத்திலும் தொய்வில்லாத வகையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருந்த திரைக்கதை ரசிகர்களை என்கேஜிங்காக்கியுள்ளது. இதன் எதிரொலியாக ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. விமர்சனத்தை வாசிக்க: போர் தொழில் Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் விருந்து!

இப்படியாக நடப்பு 2023-ம் ஆண்டில் வெளியாகிவரும் அறிமுக இயக்குநர்களின் படங்கள் மக்களின் ரசனைக்கேற்ற திரைக்கதையால் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பெற்று வருகின்றன. இப்படியான சூழல் சினிமாவை நோக்கி பயணிக்க இருக்கும் அடுத்தக்கட்ட புது முக இயக்குநர்களுக்கு நம்பிக்கையுடன் கூடிய புதிய பாதையை அமைத்துகொடுத்துள்ளது ஆரோக்கியமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x