Published : 19 Dec 2014 01:05 PM
Last Updated : 19 Dec 2014 01:05 PM
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டைப் பெற்றிருக்கும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் திரைப்படம் 'குற்றம் கடிதல்'.
12-வது சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்படும் இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஜே.சதீஷ் குமார் மற்றும் கிறிஸ்டி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தமிழில் அதிக மேடை நாடகங்கள் இயக்கி இருக்கும் பிரம்மா, 'குற்றம் கடிதல்' மூலமாக திரையுலகிற்கு வருகிறார்.
சென்னை பட விழாவில் இப்படம் திரையிடுவது குறித்தும், ரசிகர்களின் பார்வை பற்றியும் இயக்குநர் பிரம்மாவிடம் கேட்டபோது, "இதுவரை மொத்தம் 6 திரைப்பட விழாக்களில் 'குற்றம் கடிதல்' தேர்வாகி இருக்கிறது. ஜிம்பாப்பே, மும்பை, பெங்களூரு, கோவா ஆகிய திரைப்பட விழாக்களைத் தொடர்ந்து சென்னை திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புனே திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
அனைத்து திரைப்பட விழாக்களிலுமே நான் எதிர்பார்த்ததைவிட படத்தை அதிகமாகவே அலசி கேள்விகளை எழுப்பினார்கள். நானே எதிர்பார்க்காத விஷயங்கள் மற்றும் கோணங்களில் கேள்விகளை எதிர்கொண்டபோது, சரியான படத்தை தான் எடுத்திருக்கிறோம் என்று மிகவும் சந்தோஷப்பட்டேன்.
என்னதான் வெளிநாடு மற்றும் வெளியூர் திரைப்பட விழாக்களில் திரையிடல் இருந்தாலும், முதன்முறையாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பது மிகவும் மிகழ்ச்சியைத் தருகிறது. மற்ற திரைப்பட விழாக்களைவிட, சென்னையில் அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இந்த நேரத்தில் ஒரே ஒரு வேண்டுகோள். 'குற்றம் கடிதல்' படத்தைப் பார்ப்பவர்களிடம் கருத்துகள் அனைத்தையுமே நான் எதிர்நோக்குகிறேன். அதேவேளையில், கருத்துகள் சொல்லும்போதும், விமர்சிக்கும்போதும் படத்தின் கதையை வெளியிட்டுவிட வேண்டாம்.
ஏனென்றால், ஒரு தாய் கருவுற்று இருக்கும் சமயத்தில் எப்படி குழந்தையை பாதுகாப்பாள். அதேமாதிரி என் குழந்தையை பொத்திப் பொத்தி இதுவரை கொண்டு வந்திருக்கிறேன். குழந்தைப் பிரசவம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவைத் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அதற்குள் குழந்தையை சிசேரியன் செய்து வெளியேற்றி விடாதீர்கள் என்பதை இச்சமயத்தில் வேண்டுகோளாக வைக்கிறேன்" என்றார் இயக்குநர் பிரம்மா.
சமீபத்தில் திரைப்பட விழாக்களின் உங்களை வெகுவாக கவர்ந்த படங்கள் குறித்து கேட்டதற்கு, "யெல்லோ என்ற மராத்திய மொழி படமும், பெட்டர்னல் ஹவுஸ் என்ற ஈரானிய படமும் என்னை மிகவும் பாதித்தது. வாய்ப்பு இருப்பவர்கள், இப்படங்களை சென்னைத் திரைப்பட விழாவில் பாருங்கள்" என்று பரிந்துரைத்தார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT