Published : 11 Jan 2017 06:24 PM
Last Updated : 11 Jan 2017 06:24 PM
ஜன.12 - ரஷ்ய கலாச்சார மையம் - முற்பகல் 11.30 மணி | மெட்ரோ | இயக்குநர்: ஆனந்த் கிருஷ்ணன் | தமிழ் | 119 நிமிடங்கள்
ஓய்வு பெற்ற அப்பா, இல்லத்தரசி அம்மா, இரண்டு மகன்கள் எனக் கச்சிதமான நடுத்தரக் குடும்பம். பொறுப்புள்ள மூத்த மகனாக நாயகன் சிரிஷ். ஒன்றரை லட்சம் ரூபாய் மோட்டார் சைக்கிள், ஆப்பிள் ஐ போன் என ஆடம்பரமாக வாழப் பேராசைப்படும் இளைய மகனாக சத்யா. தனது ஆசைகளை அடைவதற்காக எதற்கும் துணிகிறார் சத்யா. அந்த துணிச்சல் அவரை சங்கிலிப் பறிப்புக் கும்பலிடம் அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்கிறது இயக்குநர் ஆனந்த கிருஷ்ணாவின் 'மெட்ரோ'.
நகரத்தின் அமைதியான சாலைகளில் நடக்கும் பயங்கரமான சங்கிலிப் பறிப்புச் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் அதிபயங்கரமான வலைப்பின்னலை ஊடுருவிச் செல்கிறது 'மெட்ரோ'. எடுத்துக்கொண்ட கதைக் களத்தைத் துல்லியமாகச் சித்தரிக்க இயக்குநர் மெனக்கெட்டிருப்பது காட்சிகளில் தெரிகிறது. அவற்றைக் காட்சிப்படுத்திய விதமும் புதிதாக இருக்கிறது. தங்கச் சங்கிலியை அறுப்பதும் அவற்றுக்கான திட்டமிடல்களும் பதைபதைக்க வைக்கின்றன.
சத்யாவின் சபலங்களில் தொடங்கும் பிரச்சினைகளைச் சங்கிலித் தொடர் காட்சிகளாக இணைத்து ரகசிய உலகம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர். சங்கிலியை அறுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், திருட்டுச் சங்கிலிகளை விற்பதற்கான முகவர்களுக்கான ரகசிய எண்கள், திருட்டு நகை உலகின் நடுநிசி மனிதர்கள், நகைகளை உருக்கித் தங்க பிஸ்கெட்டுகளைத் தயாரிக்கும் ரகசியத் தொழிற்கூடம் என இன்னொரு உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது படம். பெருமளவு நம்பகத்தன்மையுடன் இந்த உலகம் திரையில் விரிகிறது.
வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் பின்னணி இசையில் மிரட்டுகிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளைப் பதிவுசெய்த விதம் நன்று. காட்சிகளுக்கு ஏற்ப வித்தியாசமாக அமைந்துள்ள சில கோணங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. சங்கிலிப் பறிப்புக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ள விதம் அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.
சங்கிலிப் பறிப்பு வலைப்பின்னலை விரிவாகக் காட்சிப்படுத்துவதில் இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். கருத்தியல் ரீதியில் சில குறைகள் இருந்தாலும் சென்னையின் புத்தம்புது ரயிலைப்போல அதிவேகத்தில் பயணிக்கிறது மெட்ரோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT