Published : 12 Dec 2018 07:07 PM
Last Updated : 12 Dec 2018 07:07 PM
59 நாடுகளின் தலைசிறந்த 150 திரைப்படங்களில் நீங்கள் சந்திக்கவிருக்கும் கதாபாத்திரங்களின் வண்ணங்கள் பலவிதம். பல்வேறு கலாச்சார, வரலாற்றுப் பின்புலங்களில் இருந்து அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது 16-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா.
இன்று தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடக்கும் இந்த 8 நாள் கொண்டாட்டத்தில், திரைப்பட ஆர்வலர்களின் அலைச்சலைப் போக்கும்விதமாக, சென்னை, அண்ணாசாலையில் அருகருகே அமைந்திருக்கும் தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ மற்றும் தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் உள்ளிட்ட ஆறு திரையரங்குகளில் படங்களைத் திரையிட ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது, கடந்த 16 ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவைத் திறம்பட ஒருங்கிணைத்து வரும் இண்டோசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.
தமிழக அரசின் நிதி உதவி, ‘தி இந்து’ குழுமத்தின் ஊடகப் பங்கேற்பு ஆகிய சிறப்புகளும் இணைந்து கொள்ளத் தமிழகத்தின் கலாச்சாரப் பெருமிதங்களில் ஒன்றாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது சென்னை சர்வதேசப் படவிழா.
எண்ணிக்கை அதிகம்
இந்த ஆண்டின் சிறப்புகளைப் பற்றி இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்தின் செயலாளர் ஏ.தங்கராஜ் கூறும்போது “உலக சினிமாத் திறமைகளுக்கான அங்கீகார மேடைகளாக கான், பெர்லின் சர்வதேசப் படவிழாக்கள் இருக்கின்றன.
இங்கே விருதும் கவனமும் பெறும் படங்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்துசேர்ப்பதில் எங்கள் முயற்சி முதன்மை பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த கான் படவிழாவில் தங்கப் பனை விருது வென்ற, ‘ஷாப் லிப்டர்ஸ்’ என்ற ஜப்பானியப் படத்தை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறவிருக்கும் தொடக்கவிழாவைத் தொடர்ந்து மாலை 6:15 மணிக்குத் திரையிடுகிறோம்.
சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளைக் குவித்த திரைப்படங்களைக் கொண்டுவந்து சேர்த்த விதத்தில் கடந்த ஆண்டைவிட எண்ணிக்கை அதிகம். அதேபோல 16-வது சர்வதேசப் படவிழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும் தமிழ்ப் படங்களுக்கு இடையிலான போட்டி இந்த ஆண்டும் சூடு பிடித்திருக்கிறது.
2017, அக்டோபர் 16 முதல் 2018 அக்டோபர் 15 வரையிலான ஓராண்டு காலத்துக்குள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நுழைவுத் தகுதியை ஏற்று விண்ணப்பித்த 20 படங்களில் இருந்து 12 படங்களை இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.” என்கிறார் ஏ. தங்கராஜ்.
தமிழ்ப் படப் போட்டியில்…
தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் மோதும், '96', 'அபியும் அவனும்', 'அண்ணனுக்கு ஜே', 'ஜீனியஸ்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'இரும்புத் திரை', 'கடைக்குட்டி சிங்கம்', 'மெர்குரி', 'பரியேறும் பெருமாள்', 'ராட்சசன்', 'வடசென்னை', 'வேலைக்காரன்' ஆகிய 12 படங்களும் சிறப்புத் தமிழ்த் திரைப்படமாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யும் திரையிடப்படுகின்றன.
ஒலிப்பதிவுக் கலைஞராக ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தி சவுண்ட் ஸ்டோரி’ என்ற மலையாளப் படம் இந்தியன் பிரீமியராக, இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட இருக்கிறது.
இவை தவிர தெற்கு ஆப்பிரிக்க தேசங்களில் ஒன்றான ஸாம்பியா நாட்டிலிருந்து ஒரு படம், கென்யாவிலிருந்து இரு படம், லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபிய நாடுகளில் இருந்து 13 படங்கள் இந்தியன் பிரீமியராக திரையிடப்பட இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT