Published : 17 Dec 2018 08:15 AM
Last Updated : 17 Dec 2018 08:15 AM

தவறவிடக்கூடாத படம்: திருப்பங்கள் மூலம் கவனிக்க வைப்பவன்!

சுமார் 16 வயதுள்ள பள்ளி மாணவிகளைத் தேடிக் கொல்லும் சைக்கோ கொலைகாரன் யார் என்று போலீஸ் கண்டுபிடித்தால் அதுவே 'ராட்சசன்'.

ஆர்வமில்லாமல் சப் இன்ஸ்பெக்டர் ஆகும் விஷ்ணு விஷால் கொலையைச் சுற்றி நடக்கும் மர்மங்கள் குறித்து விசாரிக்கும் போது முழுமையான போலீஸ் அதிகாரியாக மாறி விடுகிறார். அது கதை நாயகனுக்கான பாத்திரப் படைப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கொலைகாரனை நெருங்கும் போது நடுக்கத்தையும், அக்கா மகள் காணாமல் போனதில் பதற்றத்தையும், எதிராளியின் மனநிலை சமநிலையைக் குலைக்க கையாளும் யுத்தியில் பக்குவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகனுக்கான அம்சங்கள் அழகாய் கைவரப் பெற்றிருக்கும் விஷ்ணுவிடம் சிறந்த படங்களில் 'ராட்சசன்' முதலிடம் வகிக்கிறது. காக்கிச்சட்டை விஷ்ணுவுக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறது.

பள்ளி ஆசிரியையாக அமலாபால் வந்துபோகிறார். ஹியரிங் எய்டு சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியிலும், ஆட்டோ ஓட்டுநரைத் தேடும் காட்சியிலும் கதையின் திருப்பத்துக்குப் பயன்பட்டிருக்கிறார்.

சிரிப்பு கேரக்டரிகளிலேயே நடிக்கும் முனீஸ்காந்த் என்கிற ராம்தாஸும், காளிவெங்கட்டும் சீரியஸ் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள். அதிகாரத் தோரணையில் ஈகோவுடன் முறைப்பு காட்டும் சூசன், போலீஸ் உயர் அதிகாரி கஜராஜா, நிழல்கள் ரவி, ராதாரவி, வினோதினி ஆகியோர் படத்தின் கதையோட்டத்தில் இயல்பாய்ப் பொருந்திப் போகிறார்கள். ஜிப்ரானின் இசையும், பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கின்றன.

ஒருதலைக் காதலால் நடக்கும் விபரீதங்கள், ஆள் கடத்தல் குற்றங்கள், பாலியல் பலாத்காரங்கள் என்று பெண்களைச் சுற்றிலும் இருக்கும் பிரச்சினைகளை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார். சம்யுக்தா, அமுதா, மீரா, அம்மு என்ற நான்கு மாணவிகளின் கொலை குறித்த விவரணைகள், கொலை செய்யப்பட்ட விதம் பீதியை வரவழைக்கிறது. தடயம் இல்லாமல் தவிக்கும் போலீஸார் துப்பு துலங்க கிப்ட் பாக்ஸ், பொம்மையைக் க்ளூவாகக் கொடுத்திருப்பது சிறந்த திரைக்கதை உத்தி.

ஆட்டோ டிரைவர், பள்ளி ஆசிரியர் என அடுத்தடுத்த சந்தேகங்கள் எழ, அனைத்தும் ஒரு கட்டத்தில் மாறி மிகப்பெரிய மோசமான விளைவைச் சந்தித்த ஒருவனின் மனநிலைப் பிறழ்வுதான் காரணம் என்பதை தர்க்க ரீதியாக விளக்கியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. பள்ளி மாணவியைக் காப்பாற்றப் போய் அங்கு வெளிப்படும் ஒரு ட்விஸ்ட், மேஜிக் ஷோ செய்யும் ஆசிரியைத் தேடிப்போக அங்கு வெளிப்படும் இன்னொரு ட்விஸ்ட் என கதையின் திருப்பங்கள் கச்சிதத் தன்மையுடன் அமைகின்றன.

மலைக்க வைக்கும் அளவுக்கு உழைப்பைக் கொட்டி நுட்பமான திருப்பங்களில் கவனிக்க வைத்த விதத்தில் 'ராட்சசன்' ஈர்க்கிறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x